பரோட்டா சாப்பிட்டு அஜீரண கோளாறால் மனிதர்கள் இறக்கும் செய்திகள்தான் அடிக்கடி வரும். ஆனால் கேரளாவில் பரோட்டா சாப்பிட்டு 6 மாடுகள் இறந்துள்ள சோக செய்தி கால்நடை வளர்ப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வெளிநல்லூர் பகுதியைச் சேந்தவர் ஹஸ்புல்லா. இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, ஊருக்கு வந்து மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். அவர், தன் மாட்டுப்பண்ணையில் 30 பசுக்களையும், 2 எருமைகளையும், 2 காளை மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பரோட்டாவுடன், பலாப்பழங்கள், பயறு வகைகள், கோதுமை தவிடு என்று பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உணவாக கொடுத்துள்ளார். இதையடுத்து மறுநாள் பசுக்களுக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனே கால்நடை மருத்துவர்களை அழைத்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்த நாள்களில் வரிசையாக 6 மாடுகள் இறந்துள்ளன. மேலும், பரோட்டா சாப்பிட்ட 8 மாடுகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாடுகள் இறப்பால் சுமார் நாலரை லட்சம் ரூபாய் விவசாயிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரோட்டாவை அதிக அளவில் சாப்பிட்டதால்தான் மாடுகள் இறந்துள்ளன என தெரிவித்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் ‘பரோட்டாவை எக்காரணம் கொண்டும் மாடுகளுக்கு உணவாக கொடுக்கக்கூடாது’ என எச்சரித்துள்ளனர். பழங்கள், அரிசிக் கஞ்சி ஆகியவற்றை அதிக அளவில் உணவாக கொடுத்தால் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அஜீரணம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மரணமடையும் நிலை ஏற்படும். எனவே மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் மனிதர்கள் சாப்பிடும் உணவை கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என கொல்லம் மாவட்ட கால்நடை நல அலுவலர் டாக்டர் ஷைன் குமார் தெரிவித்துள்ளார்.
மாடுகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பண்ணைக்கு கேரளா மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து அமைச்சர் சிஞ்சு ராணி கூறுகையில், “மாடுகளுக்கு கொடுத்த உணவில் பரோட்டா அதிகமாக சேர்த்ததால் அவை மரணமடைந்துள்ளன. பரோட்டாவைச் சாப்பிட்ட மாடுகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவர்கள் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், மாடுகள் இறந்துவிட்டன. இதுபோன்று திடீரென ஏற்படும் இழப்புகளால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். மாடுகளுக்கு வழங்கும் உணவுகள் குறித்து விவசாயிகளிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் உள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.