இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் 03 அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு.

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயத்தை அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து இந்திய வௌிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பமானதோடு, இரு நாடுகளுக்கிடையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது.

இதன்போது, இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சரினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 106 வீடுகளின் டிஜிட்டல் பெயர் பலகையும் ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் திறந்து வைத்தனர்.

கொழும்பு – திருகோணமலையின் இரண்டு மாதிரிக் கிராமங்களில் அமைக்கப்பட்ட தலா 24 வீடுகளை ஜனாதிபதியும், இந்திய வௌிவிவகார அமைச்சரும் மக்கள் பாவனைக்காக கையளித்தனர்.

இந்தியாவின் 06 மில்லியன் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையில் சமுத்திர மீட்பு தொடர்பாடல் மையமும் (MRCC) ஜனாதிபதி மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும்.

வௌிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.