கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (33). இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் பன்னீர் செல்வம் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அமுதாவின் கணவர் பன்னீர்செல்வம் 7 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அமுதாவுக்கும், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த நவநீதனுக்கும் இன்ஸ்டா மூலம் 4-ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இப்போது கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாவில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம். அமுதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளியான ஜெகதீசின் மனைவி சோபியா-வுக்கும் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை இரவு அமுதாவும், நவநீதனும் வீட்டின் முன்பக்கம் நின்றபடி செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, சோபியா தனது வீட்டின் முன் கிடந்த குப்பைகளை கூட்டி தீ வைத்து எரித்துள்ளார். அந்த புகையின் காரணமாக அமுதாவுக்கு வீடியோ எடுக்க இடைஞ்சல் ஏற்பட்டதாம். இதனால் அமுதா ஆத்திரம் அடைந்து சோபியாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அமுதாவுக்கு ஆதரவாக நவநீதனும், சோபியாவுக்கு ஆதரவாக அவரது கணவர் ஜெகதீசும் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நவநீத கிருஷ்ணன் ஒரு கம்பியால் ஜெகதீசை சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்தம் பீறிட்ட நிலையில் படுகாயமடைந்த ஜெகதீஷ் மயங்கி கீழே விழுந்தார்.
அப்பகுதியினர் ஜெகதீசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜெகதீஸ் நேற்று மரணமடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டா ஜோடிகளான அமுதா, நவநீதகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ எடுக்க புகை இடைஞ்சலாக இருந்ததாக கூறி நடந்த தகராறு கொலையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.