கனவு – 145 | இணைய வழி கூட்டுக் குழு நண்பர் குழாம் திட்டம் | சென்னை – வளமும் வாய்ப்பும்!

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 16 சதவிகிதம் பேர் உள்ளதாக 2011-ம் ஆண்டு புள்ளிவிவரம் ஒன்று குறிப்பிடுகிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் உயர்கல்வி பயின்று, பெரும் நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருந்தோர். இத்தகைய குடிமக்கள் அனேகமாக ஓரிரு மகனோ, மகளோ கொண்டிருக்கின்றனர்.

சர்வேத அளவில் அமையப்பெற்றுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவர்களது குழந்தைகள் பணி நிமித்தம் காரணமாக, உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் பணியாற்றுகின்றனர். பல நேரங்களில் அவர்களில் பெரும்பாலானோர் அந்த நாட்டு குடியுரிமை பெற்று, அங்கே தங்கிவிடக் கூடிய சூழலும் உருவாகிவிடுகிறது. இதனால் பெற்றோரின் உடனிருந்து அவர்களைப் பராமரிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு அமைவதில்லை.

இதனால் தனித்து விடப்படும் மூத்த குடிமக்கள் மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்கின்றனர். மறுபுறம், இளைஞர்கள் பலர் உயர்கல்வி பெற்ற போதிலும், அதைத் தாண்டி தேவைப்படக் கூடிய பல்வேறு திறன்களைப் பெறுவதில் ஒரு சிலரே சிறந்து விளங்குகின்றனர். பலர் இத்தகைய திறன்களில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். மூத்த குடிமக்களின் உளவியல் பிரச்னை மற்றும் இளையோர் தனித்திறன்களை வளர்த்தெடுத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இருவரையும் ஒருங்கிணைத்து, ‘இணைய வழி கூட்டுக் குழு நண்பர் குழாம்’ திட்டத்தை வடிவமைக்கலாம்.

இணையப் பக்கம் ஒன்றை உருவாக்கி, அதில் மூத்த குடிமக்களின் கல்வி மற்றும் அவர்களின் பிற திறன்களைப் பட்டியலிட வேண்டும். அதேபோன்று இளையோர்களும் அந்தத் தளத்தில் தங்களுக்கென ஓர் ஐடி-யை உருவாக்கிக் கொடுக்கவேண்டும். தங்களுக்கு எந்தெந்த திறன்களை வளர்க்கப் பயிற்சி தேவை என்பதை இளையோர்கள் குறிப்பிடும் பட்சத்தில், மூத்த குடிமக்கள் அந்த இளைஞருக்கு இளையம் வழியாகவே அதற்கான பயிற்சிகளை வழங்கலாம்.

குறிப்பாக, ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசுதல், ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ளுதல், சிவில் சர்வீஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயாராக பயிற்சி வழங்குதல், நேர்காணலுக்கான முன் தயாரிப்பு உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த மூத்த குடிமக்கள் அந்த இளைஞர்களுக்கு அளிக்கலாம்.

மேலும், தங்களின் பொழுதுபோக்கு, தொழில், வாழ்க்கை அனுபவங்கள், குடும்பம் என மனம்திறந்த உரையாடல்களுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் இந்த இணையவழி ஒருங்கிணைப்பு உதவிகரமாக இருக்கும். இதன் வாயிலாக, இளையோர்கள் திறனும் மேம்படும், மூத்த குடிமக்களும் தங்களின் ஓய்வுநேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுவதோடு அதன் வழியே கணிசமான வருமானத்தையும் பெறலாம்.

பிரேசிலைச் சேர்ந்த FCB Brasil மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த CNA Language School ஆகிய இரண்டும் இணைந்து, அதன் வழியாக மூத்த குடிமக்களையும் இளையோரையும் இணைத்து இரு தரப்பினரும் பயன்படும் வகையில் The Speaking Exchange எனும் திட்டத்தை உருவாக்கி, நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளன.

பிரேசிலில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்வது அவர்களது பணிச்சூழலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களின் தாய்மொழியான போர்த்துகேய மொழியில் கற்பதால், ஆங்கிலம் மொழியறிவை வளர்த்துக்கொள்வது அவர்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்தத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு, அமெரிக்காவிலுள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் வழியாக பிரேசில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. கூடுதலாக வேறு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் இந்த பிளாட்ஃபார்ம் வழியாக அவர்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. இன்றளவில் சுமார் 4,50,000 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் வழியே பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதே ஒரு மாபெரும் சாதனை அல்லவா!

(இன்னும் காண்போம்!)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.