கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல கோடி ரேஷன் பொருள் வினியோக ஊழல் வழக்கில் பிரபல வங்காள நடிகை ரிதுபர்ணா செங்குப்தாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரண நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் பொருட்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பகிபுர் ரஹ்மான் என்ற தொழிலதிபரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கு வங்க வனத் துறை அமைச்சராக இருந்த ஜோதிப்ரியா மாலிக்கை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தனர். 2011 முதல் 2021 வரை பொது வினியோகத் துறை அமைச்சராக ஜோதிப்ரியா மாலிக் இருந்த காலகட்டத்தில் இந்த ஊழல் நடந்துள்ளது.
இந்த வழக்கில் சில பரிவர்த்தனைகளில் பிரபல வங்காள நடிகை ரிதுபர்ணா செங்குப்தாவுக்கு தொடர்பு இருப்பதை அமலாக்கத் துறை கண்டறிந்தது. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு அமலாக்கத் துறை கடந்த மே 30-ம் தேதி சம்மன் அனுப்பியது. முதலில் வெளிநாட்டில் இருப்பதாக கூறிய ரிதுபர்ணா, அமலாக்க துறையின் இரண்டாவது சம்மனை ஏற்றுக்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் அவர் ஆஜரானார்.
இதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சில கோப்புகளுடன் ரிதுபர்ணாவின் அக்கவுன்ட்டன்ட் அமலாக்கத் துறை அலுவலகம் சென்றார். ரிதுபர்ணாவின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அவரை விட தன்னால் நன்கு விளக்கம் அளிக்க முடியும் என அவர் கூறியதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிதுபர்ணாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் கடந்த 2019-ல் ரோஸ் வேலி நிதி நிறுவன ஊழல் வழக்கில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரோஸ் வேலி குழுமத்தின் திரைப்படங்கள் உள்ளிட்ட சில பொழுதுபோக்கு திட்டங்களில் ரிதுபர்ணாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தினர்.