`3 தேனடைக்கு விவசாயம் செழிக்கும்; 1 தேனடைக்கு சுமாரான விவசாயம்!' – தேனிமலை முருகன் கோயில் ஐதீகம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து காரையூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் தேனிமலையில்தான் இந்த ஐதிகம் நெடுங்காலமாக இருக்கிறது. இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கிருக்கும் தேன் கூடுகளைக் கொண்ட மலையில் சிறப்பாக அமைந்திருக்கிறது சுப்பிரமணியசுவாமி கோயில். இந்த மலையின் உச்சியில் தேனிக்கள் பெரிய தேன்கூடுகளைக் கட்டுவது வழக்கம்.

அதுபற்றி பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர்,

தேனிமலை

“ஒவ்வொரு வருடமும் இங்குள்ள கொம்புப் பாறையில் தேனீக்கள் தேன்கூடுகளைக் கட்டும். அப்படி ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் கட்டும் தேனடைகளில் இருந்து மக்களோ, தேன் வியாபாரிகளோ தேன் எதுவும் எடுக்கமாட்டார்கள். அந்தத் தேனடைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்குகூட அதிகம் போகமாட்டார்கள். காரணம், அது மக்களுக்கு ஆன்மிக பலம் தரும் விஷயமாகவும், விவசாயிகளின் நம்பிக்கைக்கான சின்னமாகவும் இருந்து வருகிறது.

அதன்படி, வருடத்தில் மழைக்காலம் தொடங்கும் ஐப்பசி மாதம் கொம்புப் பாறையில் மூன்று பெரிய தேன்கூடுகள் கட்டினால் அந்த வருடம் விவசாயம் செழிப்பாக நடைபெறும். விவசாயிகளுக்கு அமோக விளைச்சல் கிடைக்கும். அதேபோல், இரண்டு தேன் கூடுகள் கட்டினால் அந்த வருடம் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். தவிர, ஒரே ஒரு தேன் கூடு மட்டும் கட்டினால் அந்த வருஷம் அந்தப் பகுதி முழுக்க விவசாயம் பொய்த்துப்போகும்.

வயலிலிருந்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்விதமாக எதுவும் கிடைக்காது. இது காலம்காலமாக எங்களுக்கு இருக்கும் ஐதிகம். ஒருமுறைகூட இதற்காக மாறாக நடந்ததில்லை. எல்லாம் முருகன் போடும் கணக்கு. அதுதான் தேனடை வடிவில் விவசாயிகள் வாழ்வில் நடக்கிறது.

கொம்பு பாறை

அதனால் இந்த கொம்புப் பாறை உச்சியில் தேனீக்களால் கட்டப்படும் தேன்கூடுகள், மக்கள் வாழ்க்கையின், அவர்களது ஆன்மிக நம்பிக்கையின் ஓர் அம்சமாக விளங்குகிறது. அதோடு, இந்த கொம்புப் பாறையில் ஒரு தேன்கூடாவது வருடம் முழுவதும் இருக்கும். ஆனால், ஐப்பசி மாதம் எத்தனை கூடுகள் இருக்கிறதோ அதை வைத்துதான் விவசாயிகள் அந்த வருட வெள்ளாமைக்கு வெள்ளோட்டம் பார்ப்பார்கள். அதேபோல், இந்தத் தேனிமலையைச் சுற்றி ஆங்காங்கே தேனீக்கள் தேனடைகளை கட்டும்.

முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் தேனீக்களாய் பிறந்து, இந்த மலையை கட்டிக் காத்து, முருகனின் அருள் பெற்று சாபவிமோசனம் அடைவார்கள் என்றும் சொல்கின்றனர். அதனால், இங்கு உள்ள தேனீக்கள் எங்கள் முன்னோர்கள்தான். அதனால்தான், இந்த மலைக்குத் தேனிமலை என்று திருநாமமே வந்திருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனிமலையில் முருகனுக்கு 200 மேல படிகளை அமைத்துக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த சுப்ரமணியசுவாமி கோயிலில் சித்தர்கள் பலர் தங்கி இருந்து முருகனின் அருளைப் பெற்று, முக்தி அடைந்ததாகவும், அந்த சித்தர்கள் இன்றும் முருகனை தரிசித்து வருவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. அதேபோல், இந்தத் தேனிமலை முருகன் கோயிலில் அழகிய சுனைகள் இருக்கின்றன.

கோயில் தீர்த்தம்

அந்த சுனைகளில் இருந்துதான் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆனால், வெளி ஆட்களும், பக்தர்களும் இந்த சுனைகளில் இருந்து நீர் எடுக்க அனுமதியில்லை. முன்னொருகாலத்தில் புதுக்கோட்டை மன்னர் ஒருவர் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதி வனப்பகுதியாக இருந்ததால், இங்கு தனது படை பரிவாரங்களுடன் வேட்டைக்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த மன்னருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் துடித்த அவருக்கு, அந்த வயிற்று வலிக்கான காரணம் பிடிபடவில்லை. மன்னருக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் யாரேனும் இருக்கிறார்களா என்று இந்தப் பகுதியில் தேடியுள்ளனர்.

ஆனால், வைத்தியர்கள் யாரும் இந்தப் பகுதியில் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள், அப்போது, வனத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ‘இங்கு வைத்தியர் யாரும் இல்லை. ஆனால், அருகில் இருக்கும் தேனிமலை சுனை நீரைக் கொண்டு வந்து மன்னருக்குக் கொடுத்தால் வயிற்று வலி நீங்கும். அது அங்குள்ள முருகனின் அருளால் சாத்தியமாகும்’ என கூறினான்.

தேனிமலை சுப்ரமணிசுவாமி கோயில்

அப்படி அந்த சுனையில் இருந்து நீர் கொண்டு வந்து மன்னரை பருக வைக்க, அவருக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலி தீர்ந்தது. அதனால் மகிழ்ந்த மன்னர், இந்தத் தேனிமலையில் முருகனுக்கு ஆலயம் எழுப்பி, தொழ ஆரம்பித்தார். முருகனின் கடாட்சம் இருப்பதால் தான் ஏறுவெயில் நேரத்திலும் இந்த மொட்டை பாறையில் உள்ள படிகளில் ஏறி முருகனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் கால்களை வெப்பம் துளியும் தாக்காது. மாறாக, அவர்களது கால்களில் குளிர்ச்சி ஏற்படும். அப்பன் முருகன் நடத்தும் அற்புதம் அது!” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.