பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னப்பட்ணா இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் சென்னப்பட்ணா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக முன்னாள் முதல்வர் குமாரசாமி இருந்தார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், சென்னப்பட்ணா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று சென்னப்பட்ணாவுக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பமான இடம் சென்னபட்ணா தான். இந்த தொகுதி மக்களே என்னை முதல் முறையாக வெற்றி பெற வைத்தார்கள். என் வாழ்வில் எல்லா நிலையிலும் சென்னப்பட்ணா மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பட்ட கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.
எனது தற்போதைய சாத்தனூர் தொகுதியும் எனக்கு முக்கியம் என்றாலும், சென்னப்பட்ணா அதனை விட முக்கியமானது. இந்த தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். இந்த மக்களுக்கு என்னால் முடிந்த நல்லதை செய்ய விரும்புகிறேன். கட்சி விரும்பினால் நான் இங்கே களமிறங்குவேன்” என்றார்.
டி.கே.சுரேஷுக்கு வாய்ப்பு: டி.கே.சிவகுமாரின் இந்த பேச்சால் அவர், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேவேளையில் அவரது தம்பியும், முன்னாள் எம்பியுமான டி.கே.சுரேஷை அங்கு நிறுத்த கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில் டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் தோல்வி அடைந்தார். அதனால் அவரை இடைத்தேர்தலில் நிற்க வைத்து, எம்எல்ஏவாக ஆக்க டி.கே.சிவகுமாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.