“முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்

உதகை: “கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 பேர் இறந்திருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி தார்மிக பொருப்பேற்று பதவி விலக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, உதகை, குன்னூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பாஜகவினர் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியது: “நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றார். அந்த வளர்ச்சியை நாம் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

மூன்று மாதங்களாக வீட்டுக்குப் போகாமல் சோறு தண்ணி இல்லாமல் மிகக் கடுமையாக நம்முடைய பணியை செய்தோம். மோடி கொடுத்த பணியை செய்தோம். தாமரையை மக்களிடத்தில் எடுத்துச் சென்றோம். அயராது உழைத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். நம்மிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருக்கிறார்.

நீலகிரியில் இருந்து இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக ஆவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்து இருக்கிறார்கள். இங்கு நாம் தோல்வி அடைந்திருந்தாலும் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கியிருக்கிறார். நாம் வாக்குகளை சேகரிக்க வீடு வீடுடாக சென்றது போல் நன்றி சொல்ல ஒவ்வொரு மக்களையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்,” என்று அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது. கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 பேர் இறந்திருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி தார்மிக பொருப்பேற்று பதவி விலக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடந்த முறை அரக்கோணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டும் திமுக அரசின் கையாலாகத தனத்தால் இந்த பேரழிவு நடந்துள்ளது. இதற்கு தீர்வு காண பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும். யோகா கலை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று, மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் இளம் விதவைகள் அதிகமாகி வருகிறார்கள். எதிர்கட்சிகளுக்கு சட்ட சபையில் பேச கூட உரிமையில்லை,” என்று அவர் கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.