வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை குரூப்8 சுற்று போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. அடுத்ததாக ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் ஏறத்தாழ அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துவிடலாம். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானபோட்டியிலும் இந்திய அணி வெல்ல முனைப்பு காட்டும். இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் ஓப்பனிங் காம்பினேஷன் இந்த டி20 உலக கோப்பையில் படு மோசமாக இருக்கிறது. சீனியர் பிளேயர்களான ரோகித் சர்மா – விராட் கோலி இருவரும், இந்திய அணிக்கு ஒரு போட்டியில் கூட சூப்பரான, மெச்சதகுந்த பார்ட்னர்ஷிப்பை கொடுக்கவில்லை.
ரோகித் ஒரு போட்டியில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானால், விராட் கோலி அடுத்த போட்டியில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறுகிறார். இதே நிலை தான் கடந்த போட்டிகளிலும் நிலவுகிறது. மிடில் ஆர்டரில் களமிறங்கும் இந்திய அணியின் இளம் வீரர்களே கடந்த 5 போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். ரோகித் ஒரு போட்டியில் சிறப்பாக ஆடியதை தவிர, வேறு எந்த போட்டியிலும் ஒரு கேப்டனுக்கான பொறுப்புடன் ஆடவில்லை. ஒப்பனிங் வந்ததும் ஒரு பத்து பந்துகள் ஆடிவிட்டு, அதில் ஒரு சிக்சரோ அல்லது பவுண்டரியோ அடித்துவிட்டு, அதோடு தன் கடமை முடிந்தது என்ற அடிப்பையில் பெவிலியனுக்கு சென்றுவிடுகிறார்.
மறுமுனையில் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் செம சூப்பர் பார்மில் ஆடிவிட்டு டி20 உலக கோப்பையில் ரன் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர்களுக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த எல்லா போட்டிகளிலும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஜெய்ஷ்வால் அடுத்த போட்டியில் இருந்து இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். விராட் வழக்கம்போல் மூன்றாவது இடத்தில் இறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். நல்லா ஆடுவார்கள் என இத்தனை போட்டிகளிலும் எதிர்பார்த்தது போதும், இனி இளம் வீரர்களுக்கு விராட், ரோகித் வாய்ப்பு கொடுத்து ஒதுங்கிக் கொள்வது அவர்களுக்கு நல்லது என்றும் கடுமையான விமர்சனத்தை முன்னாள் வீரர்கள் சிலரும் தெரிவித்திருப்பதால், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.