டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், உயர் நீதிமன்றம் இன்று அதன்மீது இடைக்கால விதித்திருக்கிறது. முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச்சில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைதுசெய்தது.
அதன் பின்னர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு, மே பாதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால், நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் திகார் சிறையில் சரணடைந்தார். இத்தகைய சூழலில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து, கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவின்மீது தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “இதை விட விபரீத உத்தரவு இருக்க முடியாது. இரு தரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கை வாதிடவோ, எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கவோ போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. ரூ.100 கோடி கேட்டதில் அவருக்கு பங்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக அறிக்கைகளைக் காட்டினோம். ஆனால், இதில் நேரடி ஆதாரம் இல்லை என நீதிபதி புறக்கணித்தார்” என்று வாதிட்டார். இறுதியில், உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவின்மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதோடு, ஜூன் 25-ம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.