புதுடெல்லி: அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024-ன் பிரிவு 1ன் துணைப் பிரிவு (2)-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த சட்டம் ஜூன் 21, 2024 தேதி முதல் அமலுக்கு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் எத்தகைய செயல்கள் சட்டப்படி குற்றம் என்பதையும், அவற்றுக்கான தண்டன விவரங்களையும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்டுள்ளது. அதன்படி, “வினாத்தாளை கசியவிடுதல், பதில்களை வெளியிடுதல், பொதுத் தேர்வின்போது அங்கீகரிக்கப்படாத வகையில் விண்ணப்பதாரருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுதல், கணினி வலையமைப்பை சேதப்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றங்கள். இந்த குற்றச் செயலில் தனி நபரோ, குழுவோ, அல்லது நிறுவனமோ ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவை தவிர, ஏமாற்றுவதற்கு அல்லது பண ஆதாயத்திற்காக போலி இணையதளத்தை உருவாக்குதல், போலி தேர்வு நடத்துதல், போலி அனுமதி அட்டைகளை வங்குதல், போலி ஆஃபர் கடிதங்களை வழங்குதல், இருக்கைகளை நிர்ணயிப்பதில் முறைகேட்டில் ஈடுபடுதல், தேர்வர்களுக்கான தேர்வு தேதிகள் மற்றும் ஷிப்ட்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுதல் ஆகியவை இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களில் அடங்கும்.
இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபடும் நபர் அல்லது நபர்களுக்கும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பொதுத் தேர்வு ஆணையத்தால் தேர்வுகளை நடத்தும் சேவை வழங்குநர் முறைகேடுகளில் ஈடுபட்டால், இந்த சட்டத்தின்படி ரூ. 1 கோடி வரை அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார். இத்தகைய சேவை வழங்குநர்கள் 4 வருட காலத்திற்கு எந்தவொரு பொதுத் தேர்வையும் நடத்துவதற்கான எந்தப் பொறுப்பையும் வழங்குவதிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள்” என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அறிவித்துள்ளது.