பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தை நிறுவ வேண்டும் என அங்குள்ள பட்டியலின அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வந்தனர். இதேபோல அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் வாசிக்க வேண்டும் வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதை வரவேற்ற பட்டியலின அமைப்பினர், ‘அரசமைப்பு சட்டத்தை எழுதிய பாபாசாகேப் அம்பேத்கரின் படத்தை நிறுவ உத்தரவிடாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினர்.
நேற்று முன்தினம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா, கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள் அனைத்திலும் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும்.
இந்த கோரிக்கை நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரால் எழுப்பட்டுள்ளது எனக்கூறி, அதற்கான முடிவினை முன்மொழிந்தார். இதனை அனைத்து அமைச்சர்களும் ஏற்று, ஒப்புதல் அளித்தனர்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா பிறப்பித்த அறிவிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்திலும் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன், அரசமைப்பு சட்டத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தையும் நிறுவ வேண்டும்.
அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் அவரது சிலை அல்லது படத்தை அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டார். கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்கு பட்டியலின அமைப்பினரும் எழுத்தாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.