சென்னை: “சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் என்கிற ரசாயன கலவையைக் கலந்த கலவையைக் குடித்ததால், அங்குள்ள மக்களில் 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது விரும்பத்தகாத ஒரு செயல். யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆனால், 40-க்கு 40 தொகுதிகளிலும் தோல்வியைக் கண்டுள்ள ஒரே காரணத்துக்காகவும், மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்துவிட்டோம், சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்ப வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சட்டமன்றத்தை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத்தில் அவருக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்,” என்றார்.
அப்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த விவகாரத்தில், உடனடியாக சிபிசிஐடி விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒருநபர் ஆணைய விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்” என்றார்.
சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன், என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எதற்கு சிபிஐ விசாரணை. இதற்கு முன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது. பண்ருட்டியில் நடந்த சம்பவத்துக்கு சிபிஐ விசாரணையா நடத்தினர்?. அன்றைக்கு நீதி விசாரணை கமிஷன் அமைத்தார்களா?. ஆனால், திமுக அரசு சிபிசிஐடி விசாரணை, கமிஷன், உடனடியாக நிவாரணம் வழங்கியுள்ளது. இதில் எதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்?
சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. காவல் நிலையத்தில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதை முதல்வராக இருந்த எடப்பாடி மறைக்கப் பார்த்ததால், நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்றார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனை அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மெத்தனால் ரசாயன கலவையை தண்ணீரில் கலந்து சாப்பிட்டதால் ஏற்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் குறித்து எங்கிருந்து புகார் வந்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பல வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது, பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிச்சயமாக அரசு கள்ளச் சாராயத்தை அனுமதிக்க முடியாது. கள்ளச் சாராயத்தைத் தடுக்க வேண்டும் என்பதில், எல்லோரையும் விட அதிக அக்கறைக் கொண்டது இந்த அரசு,” என்று அவர் கூறினார்.