‘கைவினை பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ரூ.40 கோடியில் சென்னை அங்காடி’

பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க, ரூ.40 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடைகள், அரங்கங்கள் கொண்ட சென்னை அங்காடி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மானியக் கோரிக்கைமீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை மாநகரில் 10 பொதுநூலகங்கள் மின்-வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மையங்களாக ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ஏதுவாக, பல்வேறு வசதிகளுடன் கூடிய கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி), 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்.

மேலும், சென்னை மாநகருக்குவெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் (Flood Control Map) தயாரிக்கப்படும். மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம், சேத்துப்பட்டு பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். தி.நகர், அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர், ஆவடி, பாடியநல்லூர், தங்கசாலை வள்ளலார் நகர் ஆகிய பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனைஅங்காடி வளாகத்தில் ரூ.15 கோடியில் மழைநீர் வடிகால் , கொண்டித் தோப்பு வால்டாக்ஸ் சாலையில் ரூ.20 கோடியில் சமுதாயக் கூடம் மற்றும் விளையாட்டு திடல், ரூ.30 கோடியில் சென்னையில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும். மேலும், சேப்பாக்கம் பகுதியில் ரத்த சுத்திகரிப்பு மையம் (Dialysis centre) ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும்.

அதேபோல், ராயபுரம் மூலகொத்தளத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். எழும்பூர் ஹாரிங்டன் சாலை மற்றும் திருவிக நகர் கொன்னூர் நெடுஞ்சாலையில் சமுதாயக்கூடம் தலா ரூ.10 கோடியிலும், மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில் பண்பாட்டு அரங்கம் ரூ.3 கோடியிலும் உருவாக்கப்படும். மேலும், நெமிலிச்சேரியில் உள்ள புத்தேரி ஏரி ரூ.5 கோடியிலும், போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ரூ.10 கோடியிலும் மேம்படுத்தப்படும் என்பன உட்பட 46 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.