புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஹடாஸ்பர், ராம்டெக்டி, வனோவீர், பைரோபா நலா, ரஸ்தா பீட், பிப்வெவாடி, பாரதிவித்யா பீடம், பத்மாவதி உள்ளிட்டபகுதிகளில் காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கடந்த புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும்ஏராளமான 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். அவை விற்பனைக்கு என்றும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பாதசாரிகள் நடைபாதைகளைப் பயன்படுத்த முடியவில்லை. அதற்கு பதில் அவர்கள் சாலைகளில் நடந்து செல்கின்றனர். இதனால் வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
இதையடுத்து, சாலையோரம், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விதிகளை பின்பற்றாவிட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனங்களை 6 மாதங்களுக்கு பறிமுதல் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும், வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபடாமல், நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ளும்படி போக்குவரத்துத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தினந்தோறும் குறைந்தபட்சம் 5 முதல் 6 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மக்களிடம் பேசி அவர்களுடைய குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புனே நகரின் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
பாரதி வித்யா பீடம் பகுதிக்குநடந்து சென்று ஆய்வு செய்தஆணையர் அமிதேஷ் குமார் அப்பகுதி மக்கள் சிலரிடம் பேசும்போது பல்வேறு பிரச்சினைகள் அவரதுகவனத்துக்கு வந்தன.
மேலும் போலீஸார் வாகனங்களில் செல்லாமல் சாலைகளில் நடந்து செல்வதை மக்கள் பார்த்தால், பாதுகாப்பாக உணர்வார்கள். அத்துடன் குற்றங்களின் எண்ணிக்கையும் குறையும் என்று காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறினார்.