பயமறியா பிரம்மை விமர்சனம்: இது பாராட்டு பெறும் பரிசோதனை முயற்சியா அல்லது நம்மை சோதிக்கும் முயற்சியா?

சிறை கம்பிக்கு அந்தப் பக்கம் கொலைகாரன், இந்தப் பக்கம் எழுத்தாளர். இவர்கள் இருவருக்கிடையே நடக்கும் உரையாடலின் திரைவடிவமே `பயமறியா பிரம்மை’.

‘கவனம் தேவை’ என்ற எச்சரிக்கை போட்டு ஆரம்பிக்கும் இந்தப் படத்தின் கதையைச் சொல்வதிலும் நமக்குச் சற்றே எச்சரிக்கை தேவை. ‘பயமறியா பிரம்மை’ என்ற புத்தகத்தை சில வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் எழுத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு வாசகர்களும் தங்களை முதன்மை கதாபாத்திரம் போலக் கற்பனை செய்துகொள்கிறார்கள். மற்றொருபுறம் ‘உச்சிமுகடு’ என்ற புத்தகத்துக்காக சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்திக்கிறார்.

பயமறியா பிரம்மை

அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ். அதை ஜெகதீஷின் முகத்தை வைத்து நேராகக் கதை சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்துக் கதை சொன்னால் எப்படியிருக்கும் என்கிற தனித்துவமான முயற்சியே ‘பயமறியா பிரம்மை’ படத்தின் கதை.

நாற்காலியில் உட்கார்ந்து கதை கேட்கும் எழுத்தாளராக வினோத் சாகருக்கு தூய தமிழ் வசனம், எதையும் நேரடி கேள்வியாக வைக்காமல் பூடகமாகப் பேசும் செயற்கையான கதாபாத்திரம். இறுதிக் காட்சியில் உயிர் பயத்தினைக் கடத்தும் இடத்தைத் தவிர நடிப்புக்குப் பெரிதாக வேலையில்லை. கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஜெடிக்கு ‘அதே டைலர் அதே வாடகை’ ரகமாகப் பூடகமான வசனங்களோடு சேர்த்து இருட்டு பிரேம்களையும் சேர்த்திருக்கிறார்கள். ஜெகதீஸாக தங்களைக் கற்பனை செய்து கொள்பவர்களாக குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், சாய் பிரியங்கா எனப் பலர் வந்து போகிறார்கள். இதில் குரு சோமசுந்தரம் மட்டும் நடிப்பால் மிரட்டுகிறார்.

பயமறியா பிரம்மை

அனைத்துமே ஒரு வித குழப்பத்துடனே நடக்கும் இந்தக் கதையில் ‘கே’யின் பின்னணி இசை மட்டும் சற்றே ஆறுதல் அளிக்கிறது. 70-80 காலகட்டங்களில் நடக்கிற கதை என்பதை நியாயம் செய்ய ரெட்ரோ பாணியிலான ஒளியுணர்வை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நந்தா. ஆங்காங்கே சிதறிக் கிடைக்கும் காட்சிகளை ஒரு படமாகக் கோர்ப்பதற்கு அதிக சிரமப்பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் அகில் பிரகாஷ்.

நேராகக் கதை சொல்லியிருந்தால் சாதாரண பிளாஷ்பேக் கதை என்று சொல்லி விடுவார்களோ என்ற எண்ணத்தில், புத்தகம், அதைப் படிக்கும் நபர்கள், அவர்கள்தான் ஜெகதீஷ் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் ராகுல் கபாலி. 96 உயிர்களைக் கொன்ற ஒரு மனிதரின் கடந்த காலத்தை ஆராய்கிறோம் என்றே படம் செல்கிறது. ஆனால் யார் அவர், அவரை கொலை செய்ய வைக்கும் மாறன் யார், ஏன் கொலை செய்தவர்களின் ரத்தத்தில் ஓவியங்கள் வரைகிறார் என்பது பற்றிய எந்தத் தெளிவான விளக்கத்தையும் படம் கொடுக்கவில்லை. இதனால் படம் முடியும் வரையிலுமே நம்மால் கதாபாத்திரங்களோடு ஒன்ற இயலவில்லை.

பயமறியா பிரம்மை

இது போகாதெனப் பாகம் பாகமாகப் பிரித்துச் சொல்லப்படும் திரைக்கதை பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் நுட்பங்கள், நுணுக்கங்கள், இச்சைகள் என எழுத்தாளரும் கொலைகாரனும் பேசிக் கொள்ளும் தூய தமிழ் வசனங்கள் சோதனை முயற்சி. ஒவ்வொரு வசனங்களின் இடையிலும் பல நொடிகள் இடைவெளி வேறு விடுகிறார்கள். படக்குழுவினர் வெறுமனே வித்தியாசமான அல்லது தனித்துவமான ஒன்றை முயன்று பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்தப் படத்தை அணுகியிருக்கிறார்கள். அதனால் வெறும் ஒன்றரை மணி நேரப் படமே பார்வையாளர்களை அயர்ச்சி அடைய வைத்துவிடுகிறது. ரத்தத்தில் ஓவியங்கள் வரைவதெல்லாம் அழகியலிலோ கலையிலோ சேராது பாஸு!

கதாபாத்திரத்தை முழுமையாக நிறுவாமல், திரைக்கதையின் புதுமையான முயற்சியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள இந்த `பயமறியா பிரம்மை’ நமக்கும் பிரமை பிடித்த உணர்வையே தந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.