மாஞ்சோலை: தொழிலாளர் குடும்பங்களை வீதியில் தவிக்கவிட்ட தமிழக அரசு?!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்துக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் நிர்வகித்துவருகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு. மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் 99 வருட குத்தகைக்கு எடுத்தது. பிறகு, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் திருநெல்வேலியைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

அந்தத் தொழிலாளர்கள்தான், மாஞ்சோலையில் தேயிலை, ஏலக்காய், மிளகு ஆகிய தோட்டங்கள் உருவாக்கினார்கள். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனில் சுமார் 560 தொழிலாளர்கள் வேலை செய்துவரும் நிலையில், தேயிலை எஸ்டேட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,000 பேர் வசித்துவருகிறார்கள்.

மாஞ்சோலை

சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை 2028-ம் ஆண்டுடன் முடிவடையவிருக்கிறது. குத்தகை காலம் முடிவுக்கு வந்ததும், இந்தப் பகுதி தமிழ்நாடு அரசின் வசமாகிவிடும். அதைத் தொடர்ந்து மாஞ்சோலை எஸ்டேட் பகுதி, தமிழக அரசால் காப்புக்காடாக அறிவிக்கப்படவிருக்கிறது. எனவே, எஸ்டேட்டில் பணியாற்றிவந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் வழங்கியது. அதன்படி, தொழிலாளர்களின் வயதுக்கேற்ப ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு கிடைக்கும்.

ஆனால், நான்கு தலைமுறைகளாக எஸ்டேட்டே கதி என்று வாழ்ந்துவந்தவர்களை திடீரென அங்கிருந்து வெளியேற்றினால், அவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்து என்ன செய்தென்று தெரியாமல் எல்லோரும் திகைத்துப்போய் இருக்கிறார்கள். ‘எங்களுக்கு உலகமே இந்த மாஞ்சோலை எஸ்டேட்தான். இங்கிருந்து எங்களை வெளியேற்றினால், நாங்கள் எங்கே போவோம், என்ன செய்வோம்?’ என்று கண்ணீர் விட்டு கதறுகிறார்கள் அந்த எளிய மக்கள்.

மாஞ்சோலை

தமிழக அரசு எந்த உதவியும் செய்யாத சூழலில், மறுவாழ்வு வசதிகளைச் செய்துகொடுக்கும் வரையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என்ற உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி முடிகிறது. ஆனால், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் எஸ்டேட் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதனால், நடுவீதிக்கு வரும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு சொந்த இடமோ, வீடோ கிடையாது. பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசிக்கின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை செய்யக்கோரி அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை.

மாஞ்சோலை

எனவே, மாஞ்சோலை எஸ்டேட்டில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டவும், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, ‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.’ என்று உத்தரவிட்டது.

மாஞ்சோலை

நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பே, கண்ணீரும் கம்பலையுமாக நடுத்தெருவில் நிற்கும் அந்த எளிய மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துகிறது. விருப்ப ஓய்வைப் பெற வேண்டுமென்று எஸ்டேட் நிர்வாகத்தால் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 45 நாள்களுக்குள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற நெருக்கடியையும் எஸ்டேட் நிர்வாகம் கொடுப்பதாக தொழிலாளர்கள் கதறுகிறார்கள்.

இந்த நிலையில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துவருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட சி.ஐ.டி.யூ செயலாளர் முருகனிடம் பேசினோம். “மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீரும் கம்பலையுமாக கதறிக்கொண்டிருக்கிறார்கள். 45 நாள்களில் வெளியேற வேண்டுமென்று மிரட்டப்படுகிறார்கள்.

அவர்களின் குடியிருப்புக்கான தண்ணீர் விநியோகத்தையும், மின் இணைப்பையும் துண்டித்துவிடுவோம் என்று நிர்வாகம் மிரட்டுவதாக தொழிலாளர்கள் சொல்கிறார்கள். இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. விருப்ப ஓய்வை ஏற்குமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. விருப்ப ஓய்வுக்கான தொகையை வாங்கிக்கொள்ளுமாறு தொழிலாளிகளை சில சக்திகள் மறைமுகமாகத் தூண்டுகின்றன. இது சரியல்ல.

தங்கள் ரத்தத்தையும், வியர்வையும் சிந்திய, அங்கிருக்கும் இந்த மக்களை வெளியேற்றிவிட்டு, வேறொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மாஞ்சோலைப் பகுதியை குத்தகைக்குவிட திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதை ஏற்க முடியாது. 8,000 ஏக்கர் நிலத்தைப் பண்படுத்தி தோட்டங்களை தொழிலாளர்கள் உருவாக்கினார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அநியாயம். குளிர் பகுதியில் வாழ்ந்து பழகிய அந்த மக்களை, வெப்பமான பகுதிக்குத் துரத்தினால் அவர்கள் எப்படி வாழ்வார்கள்?

ஸ்டாலின்

குத்தகை முடிந்துவிட்டால் அந்தப் பகுதி தமிழக அரசுக்கு சொந்தமாகிவிடும். எனவே, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டேன்டீ நிறுவனத்தின் கீழ் தொழிலாளர்கள் பணியாற்றுவதைப்போல, மாஞ்சோலையிலும் இந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து வசிக்கவும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றவும் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிறார் முருகன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.