புதுச்சேரி: கள்ளச்சாராய உயிரிழப்புகளால் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மீண்டும் உடனடியாக மதுவிலக்கு ஏடிஎஸ்பி பணியிடங்களை தமிழக அரசு உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை, வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட மது தொடர்பான விஷயங்களுக்காக காவல்துரையில் ஏடிஜிபி தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உள்ளது. மாவட்ட அளவில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி, மாநகராட்சிகளில் துணை ஆணையர் நிலையிலுள்ள பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் கட்டுப்பாட்டில் டிஎஸ்பி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்கள் இயங்கின. கடந்த 2019ல் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், “மாவட்டத்தில் எஸ்.பி.க்கு உதவியாக ஏடிஎஸ்பி இருவர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் சட்டம் ஒழுங்கு பணியையும், மற்றொருவர் மதுவிலக்கு பணிகளையும் கவனிப்பார்கள். இதில் மதுவிலக்குக்கு பதிலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு உருவானது. அப்பணியிடங்களில் ஏடிஎஸ்பி பணியாற்றுகின்றனர். மாவட்டங்களில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி இருந்து ரத்தான பிறகு மிகப்பெரிய கள்ளச்சாராய உயிரிழப்புகள் விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
அதனால் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை தடுக்க மதுவிலக்க அமலாக்கப்பிரிவு ஏடிஎஸ்பி பணியிடங்களை மீண்டும் உடனடியாக, புகார் அதிகம் வரும் மாவட்டங்களில் நியமிக்க அரசு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.