இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘SK 23’ படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சமயத்திலேயே ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளிவந்தது. ‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பையும் முருகதாஸ் தொடங்கிவிட்டார்.
சல்மான் கானுடன் படப்பிடிப்பு தளத்திலிருக்கும் புகைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸே தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிரஞ்சீவியை வைத்து இயக்கியிருந்த ‘ஸ்டாலின்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட்டுக்கு யெஸ்! கொண்டாட்டத்திற்கு நோ!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் ரிலிஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிகர் பிரபு தேவாவும், நடிகர் பிரசாந்தும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ‘ஜீ நிறுவனம்’ பெற்றிருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. இன்று மாலை 6 மணிக்கு ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளியாகிறது எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில்தான் விஜய் தனது அரசியல் என்ட்ரியை அறிவித்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவ்வப்போது பலருக்கு வாழ்த்துகளையும் தனது அதிகாரபூர்வ அரசியல் பக்கத்தில் விஜய் பதிவிட்டு வந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன் முறையாக கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயத்தை குடித்து உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார்.
“அப்புறம் நானும் பண்ணுவேன்” – பிரபாஸுக்கு அமிதாப் சொன்ன விஷயம்!
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் முழுநீள தெலுங்கு திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படியான புரொமோஷன் நிகழ்வில் பேசிய பிரபாஸ், “நான் படப்பிடிப்பு தளத்தில் தினமும் அமிதாப் பச்சனுடைய காலில் விழுந்து வணங்குவேன். அதற்கு அவர் ‘இதைச் செய்யாதே! இல்லையெனில் நானும் இதையே மீண்டும் உனக்குச் செய்வேன்!’ என என்னிடம் கூறினார். அவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் மிகப் பெரிய நடிகர்” என அமிதாப் பச்சன் குறித்து உயர்வாகக் கூறியிருக்கிறார்.
“இவங்களாலதான் பாலிவுட்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது!” – மனம் திறந்த நடிகை டாப்ஸி!
நடிகை டாப்ஸி தற்போது பாலிவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் ஷாருக்கானுடன் ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டியில் ‘பாலிவுட் பட வாய்ப்புகள் எப்படிக் கிடைத்தன?’ என்ற கேள்விக்குச் சுவாரஸ்யமான பதில் ஒன்றைக் கூறியிருக்கிறார்.
“நான் நடிகை ப்ரித்தி ஜிந்தாவைப் போல இருப்பதால்தான் எனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. நான் ப்ரித்தி ஜிந்தாவின் நியூ வெர்ஷன் என நினைக்கிறார்கள். அவரிடம் நேர்மறையான எனர்ஜி இருக்கிறது. அவர் சாயலில் இருப்பதால்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து உழைக்கிறேன்” எனக் கூறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மானின் மூன் வாக்!
பிரபுதேவா தற்போது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தாண்டி ‘பேட்ட ராப்’ போன்ற திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு முன்பு ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ உள்ளிட்ட பிரபுதேவா படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தற்போது 27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்திற்கு ‘மூன் வாக்’ என்ற டைட்டிலை வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
சீரியஸ் மோடில் காமெடி நடிகர்கள்!
காமெடி நடிகர்கள் சீரியஸாகவும், சீரியஸ் வில்லன்கள் காமெடி நடிகர்களாகவும் மிரட்டுவதுதான் தற்போதைய டிரெண்ட். சமீபத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் வடிவேலு. அதே போல சூரியும் ‘விடுதலை’, ‘கருடன்’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்து வியக்கச் செய்தார். அதேபோல, இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்துச் சிரிக்க வைத்தவர் நடிகர் சிங்கம் புலி. தற்போது வெளியாகியிருக்கிற ‘மகாராஜா’ படத்தில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றொரு பக்கம் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ஆனந்த்ராஜும் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார். மேலும், நடிகர் ‘நிழல்கள்’ ரவியும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் மூலம் காமெடி பக்கம் தனது ரூட்டை மாற்றியிருக்கிறார்.