நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டாம் என அறிவித்திருந்தாலும் ரசிகர்களும் தொண்டர்களும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள்.
‘நாளைய தீர்ப்பு’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் ‘பூவே உனக்காக’ மூலம்தான் பெரிய வெற்றியை அடைந்தார் விஜய். இந்த நிலையில் ’பூவே உனக்காக’ இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்…
“விஜய்யின் 50-வது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘பூவே உனக்காக’ வெளியாகி 22 வருடங்கள் ஆகிடுச்சு. அந்தப் படத்துல நடிக்கும்போது விஜய்க்கு 22 வயசு. நான் அதுக்கு முன்னாடி விஜய்யோட எந்தப் படத்தையும் பார்க்கல. ’தேவா’ படத்துல விஜய் ஒரு பாட்டு பாடியிருந்தார். அவர் பாடின விதமும் அவரோட நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அதை வெச்சுத்தான் ’பூவே உனக்காக’ படத்துல விஜய் நடிச்சா நல்லாருக்கும்னு அவரை புக் பண்ணினேன். அப்போ ஒரு பெரிய நடிகர், ‘இந்த கதைக்கு இந்த பையனை ஏன் செலக்ட் பண்ணீங்க? குருவி தலையில பனங்காயை வைக்கிற மாதிரி’ன்னு சொன்னார்.
அதெல்லாம் இல்ல சார், இந்தக் கதைக்கு இவர்தான் சரியா இருப்பாரு அப்படின்னு சொல்லிட்டேன். முதல் நாள் ஷூட்டிங். ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்தப்பவே, அவ்ளோ எதார்த்தமா நடிச்சார். அன்னைக்கு நைட்டு என்கிட்ட விஜய் பற்றிச் சொன்ன அந்த நடிகருக்கு போன் பண்ணி, ‘விஜய்தான் நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டாரா வருவார். நீங்க சொன்ன குருவி தலையில பனங்காயை இல்ல… பாறாங்கல்லையே வைக்கலாம்’னு சொன்னேன்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி சார், ‘விஜய் எப்படி நடிக்கிறார்’ன்னு கேட்டதுக்கு ‘எக்ஸ்ட்ராடினரி சார். அடுத்து இன்னும் ரெண்டு மூணு படங்களுக்கு கால்ஷீட் வாங்கி வெச்சுக்கோங்க’ன்னு சொன்னேன். என் கணிப்பு எல்லாமே உண்மை ஆனது. ஏன்னா ஃபைட்டு, டான்ஸு, நடிப்புன்னு எல்லாமே முறைப்படி ட்ரெயினிங் எடுத்துக்கிட்டு வந்திருந்தார் விஜய். ’பூவே உனக்காக’ படத்துக்காக டூப் போடாமலேயே ஃபைட் சீன்ல நடிச்சாரு. ஆனா, அந்தப் படத்துல அந்த ஃபைட் சீன் இடம்பெறல. அதேமாதிரி ’சிக்லெட்’ பாட்டுக்காக விஜய் சார் குதிரையில வர்ற சீன்.
ஆனா, முறையா அவர் பயிற்சி எடுக்கல. மலையிலருந்து குதிரையில வரும்போது குதிரை மடங்கி கீழே விழுந்துடுச்சு. விஜய் சாரும் கீழே விழுந்துட்டாரு. நாங்கல்லாம் பதறிப்போய்ட்டோம். விஜய் சாரோட அப்பா என்னோட நல்ல நண்பர். அவருக்கு எப்படிப் பதில் சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டிருக்கும்போது, ‘ஒன்ஸ்மோர் போலாமா சார்?’ என அந்தச் சூழலிலும் கேட்டு மிரள வெச்சுட்டாரு. சொன்னது மட்டுமில்ல, மீண்டும் குதிரையில ஏறி மலையிலிருந்து இறங்கி அந்தக் காட்சியை நடிச்சு கொடுத்தார். அந்த சின்சியாரிட்டிதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டுவந்திருக்கு. அவர் நடிச்சதாலதான் ‘பூவே உனக்காக’ செம்ம ஹிட் அடிச்சது.
‘உன்னை நினைத்து’ படமும் விஜய்யை வெச்சுத்தான் எடுத்தேன். ஆந்திராவுல ஒரு பாட்டும் மூணாற்றில் ஒரு பாட்டும் ஷூட் பண்ணிட்டோம். அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கல. ’பூவே உனக்காக’ க்ளைமாக்ஸ் மாதிரியே இருக்குன்னு சொல்லி விலகிட்டாரு. அப்புறம்தான் சூர்யாவை வெச்சு பண்ணினேன். ஆனா, விஜய் சார் எப்பவுமே அதே அன்போடும் மரியாதையோடும் இருக்காரு.
2013-ம் ஆண்டு நான் இயக்குநர் சங்கத் தலைவர் ஆனப்போ யூனியனுக்கு வந்து 25 லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்தார். அதேமாதிரி, அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருத்தர் இறந்துட்டாரு. அவரோட குடும்பமே நிர்க்கதியா நின்னப்போ, நான் விஜய் சார்க்கிட்டதான் உதவி கேட்டேன். ஷூட்டிங்குக்கு அந்தக் குடும்பத்தினரை வர வெச்சு என் முன்னாடியே ஒரு பெரிய தொகையை அவங்களுக்கு செக் எழுதிக்கொடுத்து உதவினார்.
இப்போ, என் பையனோட பட ரிலீஸுக்குக்கூட போய் சந்திச்சேன். அப்போ, என் பையன் விஜய் கனிஷ்காவைப் பார்த்து ‘அழகா இருக்கீங்க… நடிப்பு மட்டுமில்லாம ஃபைட்டும் நல்லா பண்றீங்க. நல்ல எதிர்காலம் இருக்கு பிரதர்’ன்னு வாழ்த்தி அனுப்பினார். அவரோட எளிமை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட படங்களில் ’கில்லி’, ’போக்கிரி’, ’துப்பாக்கி’ எல்லாமே என்னோட ஃபேவரைட்.
என்ன, ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான். அது ‘பூவே உனக்காக’ படத்துல விஜய்யைப் பாட வைக்கலங்குறதுதான். அவரோட முதல் படத்திலிருந்தே பாடிக்கிட்டிருக்காரு. ஆனா, ’பூவே உனக்காக’ படத்துல மட்டும்தான் பாட வைக்கல. அவர் பாடுறதுக்கான சரியான சூழல் அமையல. அந்தப் படத்துல பாட வெச்சிருக்கலாமோன்னு இப்பவும் அந்த வருத்தம் இருக்கு. சினிமாவுல உச்சத்தைத் தொட்டுட்டாரு. ஆனா, அவர் நடிக்காதது சினிமா துறைக்குப் பெரிய இழப்பு. அரசியலில் அவர் சாதிக்க வாழ்த்துகள். சினிமா மாதிரியே அரசியலில் அவர் சாதிப்பார்ன்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் வாழ்த்துகளுடன்.