புதுடெல்லி: டெல்லி நகரில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான ஹரியாணா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை டெல்லிக்கு வழங்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் நேற்று முன்தினம் டெல்லி மாநில அமைச்சர் ஆதிஷி, ஹரியாணா அரசுதண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்நிலையில் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 2-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஆதிஷி கூறியதாவது:
இது என்னுடைய 2-வது உண்ணாவிரத நாள். டெல்லியில் மிகவும் மோசமான வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்துதான் தண்ணீரைப் பெற்று வருகிறது. டெல்லி மாநிலம் 1005 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கலோன்ஸ்) பெற்று மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்கி வருகிறது.
ஹரியாணா மாநிலம் இதில் 613 எம்ஜிடிதான் வழங்க வேண்டும். சில வாரங்களாக ஹரியாணா மாநிலம், டெல்லிக்கு 513 எம்ஜிடி அளவு தண்ணீரை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் டெல்லியில் வசிக்கும் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தண்ணீரைப் பெற நான் அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் ஹரியாணா அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.
எனக்கு, டெல்லி குடிநீர் வாரியத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது குடிநீர் பிரச்சினை இன்னும் தொடர்வதாக தெரிவித்தனர். நேற்று 110 எம்ஜிடி குறைவாக ஹரியாணா சப்ளை செய்தது. 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெறும் வகையில் ஹரியாணா தண்ணீர் திறந்து விடும்வரை என்னுடைய உண்ணாவிரதம் தொடரும்.இவ்வாறு ஆதிஷி தெரிவித்தார்.