சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டினை மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.
அதில், சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், ‘விரைவில் சந்திப்போம்’ என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை விஜய் கட்சி நிர்வாகிகள் சேகரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மாணவர்களை நடிகர் விஜய் 2 கட்டங்களாக சந்தித்து பரிசு வழங்க இருக்கிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக ஜூன் 28-ம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் பாராட்டு விழாவில், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
2-வது கட்டமாக, ஜூலை 3-ம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அப்போது, மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி நடிகர் விஜய் கவுரவிக்க உள்ளார்.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான அனுமதி சீட்டினை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இன்று (ஜூன்., 23) வழங்கினார். இதற்காக, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர்.
அவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டினை வழங்கினார். தொடர்ந்து, 2-வது கட்ட விழாவுக்கான அனுமதி சீட்டினை இன்னும் ஓரிரு தினங்களில் நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் வழங்க உள்ளார்.