சித்ரதுர்கா: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புஷ்பக் ஏவுகலனின் (Reusable Launch Vehicle) தரையிறங்கும் பரிசோதனையை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இஸ்ரோ.
RLV LEX-03 என அழைக்கப்படும் தரையிறங்கும் பரிசோதனையானது கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.10 மணிக்கு நடத்தப்பட்டது. புஷ்பக் என்று பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்எல்வி வாகனம், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. கடுமையான காற்று வீசும் சூழல் நிலவியபோதும் ஆர்எல்வி வாகனம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம், செயற்கைகோள்களை விண்ணுக்கு சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், ஏவுகலன் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. சோதனையின்போது துல்லியமாக ஏவுகலன் தரையிறங்கியது என்றும், இத்தகைய வெற்றி முக்கியமான தொழில்நுட்பங்களில் இஸ்ரோவின் நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
மேலும் ஏவுகலன் சோதனையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
RLV-LEX3 Video pic.twitter.com/MkYLP4asYY
— ISRO (@isro) June 23, 2024