விராட் கோலியை முறைத்த பௌலர்… களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் – ஆக்ரோஷ வீடியோ!

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான நேற்றை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டது. வங்கதேச அணி நேற்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததே பெரும் கேள்வியை எழுப்பியது. 

ஆடுகளம் பேட்டிங் சூழலுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்து வங்கதேச அணி பெரும் தவறை செய்துவிட்டது. ரோஹித் – விராட் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரிஷப் பண்டும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினார். சூர்யகுமார் சொதப்பினாலும் ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் சிறப்பாக விளையாடினர். பாண்டியா அரைசதம் கடந்தார்.

கொக்கி போட்டு தூக்கிய ஹர்திக்

197 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக இந்திய அணி நியமித்த நிலையில், 146 ரன்களுக்கு வங்கதேசம் ஆல்அவுட்டானது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை அரைசதம் அடித்து, ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா வென்றார். ஒரு குழுவாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. சூர்யகுமாரை தவிர நேற்று அனைவரும் 20, 30 ரன்களை தொடர்ச்சியாக அடித்தது ஸ்கோரை பெரியளவில் கொண்டுசென்றது. பந்துவீச்சில் திட்டத்திற்கு ஏற பௌலர்கள் பந்துவீசினர். 

இதில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது, விராட் 37 ரன்களை அடித்திருந்த போது தன்சிம் ஹாசன் அகமது ஓவரில் இறங்கி வந்து அடிக்கப்போக ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். விராட் அவுட்டின் போது தன்சிம் ஹாசன் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல், வங்கதேச ஓப்பனர் லிட்டன் தாஸ் ஓப்பனிங்கிற்கு வந்த போது 5ஆவது ஓவரை பாண்டியா வீசினார். அதில் லிட்டன் தாஸிற்காக எதிர்காற்று அடிக்கும் திசையில் டீப் பேக்வர்ட் பாயண்ட் திசையில் சூர்யகுமாரை நிற்கவைத்து விக்கெட்டை கைப்பற்றினார். 

The Rohit Sharma celebration #rohitsharma #t20cw24 #IndvsBan #INDvsBAN #indvsban #cricketlovers#IndianCricketTeam pic.twitter.com/wwZSOnnSaA

— Devoteeofsharma45 (@devoteofrohit45) June 22, 2024

ரோஹித் ஆக்ரோஷம்

அப்போது ரோஹித் சர்மா கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. விராட் கோலியின் விக்கெட்டை அவர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினார்களோ அதற்கு பதிலடியாக பார்க்கப்பட்டது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு எதிராக லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் அடித்தது பலராலும் மறந்திருக்க முடியாது. இந்த போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்  அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும். இன்று ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டி பெரும்பாலும் சம்பிரதாய போட்டியாக முடிந்துவிடும் எனலாம். 

முதல் குரூப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கே அதிக வாய்ப்பிருக்கும் நிலையில், இரண்டாவது குரூப்பில் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து என மூன்று அணிகளும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இன்று இரவு அமெரிக்கா – இங்கிலாந்து மற்றும் நாளை காலை மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. இந்த இரண்டு போட்டிகளும் மிக முக்கியமாகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.