நடப்பு டி20 உலகக்கோப்பையின் மாபெரும் அப்செட்டை நிகழ்த்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத்கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். இந்த வெற்றி குறித்து பல நெகிழ்ச்சியான விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
ரஷீத் கான் பேசியவை, “கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 90 சதவிகிதம் ஆட்டம் எங்களின் கையில்தான் இருந்தது. மேக்ஸ்வெல்தான் எல்லாவற்றையும் மாற்றினார். அந்தப் போட்டியை நினைத்து தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன். இன்று இரவும் எனக்கு தூக்கம் வராது. ஆனால், அதற்குக் காரணம் வெற்றிபெற்ற மகிழ்ச்சியாக இருக்கும். எங்களுடைய தேசமும் எங்களுடைய மக்களும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய வெற்றி இது. ஆஸ்திரேலியா மிகப்பெரிய அணி. 2021 டி20 உலகக்கோப்பையை வென்ற அணி. அவர்களை வீழ்த்தியது சாதனைதான்.
எங்களின் வெற்றி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இளைஞர்களின் கவனத்தை கிரிக்கெட்டை நோக்கித் திருப்புகிறது. கிரிக்கெட்தான் எங்கள் மக்களுக்கான ஒரே சந்தோஷம். அவர்களுக்கு அந்த சந்தோஷத்தை எங்களால் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நான் விக்கெட்டுகள் எடுப்பதைவிட எங்கள் மக்கள் தெருக்களில் கொண்டாடி மகிழும்போது அவர்களின் முகத்தில் இருக்கும் சிரிப்பே எனக்கு பெரும் திருப்தியைக் கொடுக்கிறது. அதுதான் எனக்கு மாபெரும் ஊக்கமாக இருக்கிறது.
டி20 போட்டிகளில் ஃபீல்டிங் ரொம்பவே முக்கியம். பேட்டிங், பௌலிங் தலா 25% வெற்றியை தேடிக்கொடுக்கும். பீல்டிங்தான் மீதமுள்ள 50% வெற்றியைத் தேடிக்கொடுக்கும்.
குல்பதின் ஆப்கானிஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக ஆடி வருகிறார். அவரின் அனுபவம்தான் எங்களுக்கு பெரியளவில் உதவியது. காற்றின் வேகத்தை சமாளித்து குல்பதின் போன்ற பௌலர் சிறப்பாக வீசுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை.
பரபரப்பான கட்டங்களில் எங்கள் வீரர்கள் சில சமயங்களில் அணியின் திட்டமிடல் கூட்டத்தில் பேசியவற்றை மறந்துவிடுவார்கள். அதற்காகத்தான் ப்ராவோ பவுண்டரி லைனில் வீரர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி உங்களுக்கு கூடுதலான திருப்தியை கொடுக்கிறதா? ஏனெனில், சமீபத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் ஆட மறுத்திருந்தது.’ என ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஷீத்கான், ‘நான் எங்கே சென்று கிரிக்கெட் ஆடினாலும் மக்கள் என்னை வரவேற்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பிக்பேஸில் ஆடும்போது எனக்கு பெரும் ஆதரவு கிடைக்கிறது. 2019-ல் என் அம்மா இறந்த சமயத்தில் நான் ஆஸ்திரேலியாவில்தான் இருந்தேன். ஆஸ்திரேலிய ரசிகர்கள் அந்த கடினமான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அவர்களை ரசிகர்கள் என்பதை விட குடும்பத்தினர் என்றே சொல்லலாம்.
உங்களால் டி20 உலகக்கோப்பையில் எங்களுடன் ஆட முடியும்போது இருதரப்புத் தொடரில் ஆடுவதில் என்ன பிரச்சனையென்று தெரியவில்லை. அரசியல் பிரச்சனைகளுக்கு கிரிக்கெட் தீர்வாக இருக்க முடியாது. எனக்கு அரசியலும் தெரியாது. ஆனால், சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.’ என்றார்.
ஆப்கானிஸ்தானின் வெற்றியைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.