T20 WC Semi Finals : `ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறுமா?' – எந்தெந்த அணிக்கு வாய்ப்பு?

நடப்பு டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் 8 சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்னும் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறப்போகின்றன என்பது தெரியாமல் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் அரையிறுதியை எட்டாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் அடுத்து வரும் 4 போட்டிகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. எந்தெந்த அணிகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே.

India

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ள க்ரூப்பில் இன்னும் அத்தனை அணிகளுக்குமே வாய்ப்பு இருக்கிறது. இந்தியா இரண்டு போட்டிகளை வென்றிருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியை தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது. ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்று ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிராக தோற்றால் பிரச்சனையே இல்லாமல் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

Afghanistan

ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு எதிராக தோற்று ஆப்கானிஸ்தானும் வங்கதேசத்துக்கு எதிராக தோற்றால் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என மூன்று அணிகளும் ஒரே ஒரு போட்டியை வென்றிருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவோடு ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

சிறப்பாக ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லவும் அதிக வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தோற்று ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்திவிட்டால் ஆப்கானிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்திவிட்டால், ரன்ரேட்டை மனதில் வைத்து ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை பெரிதாக வீழ்த்த வேண்டும்.

இப்போதை நிலவரப்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 40 ரன்கள் வித்தியாசத்திலும் சேஸ் செய்தால் குறைந்தபட்சமாக 5-6 ஓவர்களை மீதம் வைத்தாவது வெல்ல வேண்டுமாம். இந்த கணக்கில் கொஞ்சம் மாறுபாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியோ இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் இப்போதைய வேண்டுதலாக இருக்கும்.

South Africa

தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அமெரிக்கா இருக்கும் க்ரூப்பில் இன்னும் உக்கிரமாக சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா முதல் இரண்டு போட்டிகளையும் வென்றிருக்கிறது. ஆனாலும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக அந்த அணி நாளை ஆடப்போகும் போட்டி வென்றே ஆக வேண்டிய போட்டியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இங்கிலாந்து ஒரு போட்டியில் வென்றிருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருக்கும் போட்டியில் அமெரிக்காவை கொஞ்சம் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் நல்ல ரன்ரேட்டில் 4 புள்ளிகளோடு செட்டில் ஆகிவிடுவார்கள். தென்னாப்பிரிக்கா ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருக்கிறது. ஆனால், இரண்டையும் நெருங்கி வந்துதான் வென்றிருக்கிறது. இதுதான் இப்போது அவர்களுக்கு பிரச்னையாக மாறியிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகளில் ஒன்றைத்தான் வென்றிருக்கிறது. ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக 11 ஓவருக்குள் வென்று ரன்ரேட்டை பெருக்கியிருக்கிறார்கள். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாளை வென்றாலே அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா எந்த பிரச்சனையும் இல்லாமல் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியே ஆக வேண்டும். சொந்த நாட்டில் நடக்கும் தொடர் என்பதால் வெஸ்ட் இண்டீஸூம் வெறியோடு ஆடி வருகிறது. அவர்களும் அத்தனை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

அரையிறுதிக்கு தகுதிப்பெறப்போகும் அணிகள் எவை என்பதை பற்றிய உங்களின் கணிப்பை கமென்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.