ஈரோடு: முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோட்ட வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மலையம்பாளையம் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் (72). மத்திய, மாநில அமைச்சராக பதவி வகித்துள்ள, சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அதன் பிறகு திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளில் செயல்பாட்டாளராக இருந்து வருகிறார்.
இவருக்கு மொடக்குறிச்சியை அடுத்த சின்னம்மாபுரத்தில் தோட்ட வீடு உள்ளது. அவ்வப்போது சுப்புலட்சுமி குடும்பத்தினர் தோட்ட வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தோட்ட வீட்டிற்கு வந்த வேலையாட்கள், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மலையம்பாளையம் போலீஸார், அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது, ”நாங்கள் ஈரோட்டில் வசிக்கும் நிலையில், தோட்ட வீட்டிற்கு மாதத்திற்கு மூன்று, நான்கு முறை வந்து செல்வது வழக்கம். மற்ற நாட்களில் வீடு பூட்டி இருக்கும். நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட வீட்டில் மதிப்புமிக்க பொருட்களை நாங்கள் வைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக சுமார் ரூ.55 ஆயிரம் வரை வைத்திருந்தோம். அதனை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதோடு, தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலையம்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.