சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுக சார்பில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு தார்மிகப் பொறுப்பேற்று, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ஜூன் 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
கருப்பு சட்டையுடன் இபிஎஸ்: அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஒரே இடத்தில் 28 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. இந்த ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் போதைப் பொருட்கள் ஒழிக்க முடியவில்லை. போதைப்பொருட்கள் சாக்லேட், திரவம், ஊசி வடிவத்தில் புழங்குகிறது. இதனால் இளைஞர்கள் மாணவர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். கஞ்சா, கள்ளச் சாராய விற்பனைகளால் உயிகள் பறிபோகும் சூழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும்,” என்று அவர் பேசினார்.
முதல்வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கள்ளச் சாராய மரணங்களை கண்டித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கள்ளச் சாராய மரணங்களை தடுக்க கோரியும், தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “சட்டப்பேரவை ஜனநாயகத்தின் தூண்கள். மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையில் தான் விவாதிக்க முடியும். ஆனால் இந்த அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க தயங்குகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சிபிஐ விசாரணை: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், “சாராயம் காய்ச்சுவதற்கு மெத்தனால் உள்ளிட்ட பொருள்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், பின்னால் உள்ள அரசியல் சக்திகள் யார் என்பதை அறியவும் சிபிஐ விசாரணை கேட்கிறோம். சிபிஐ விசாரணை செய்யும் போது தான் உண்மை நிலை தெரிய வரும். முதல்வர் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று கூறினார்.
துருபிடித்த இரும்புக்கரம்: திருச்சி அதிமுக மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்சோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பேசியது: “மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அந்த இரும்பு கரங்கள் துருப்பிடித்து விட்டது. சவுக்கு சங்கர், பஞ்சுமிட்டாய் விற்பவர், கிளி ஜோசியக்காரர் ஆகியோரை மட்டுமே அடக்குகிறது,” என்று அவர் பேசினார்.
சிபிஐ விசாரணைக்கு தயக்கம் ஏன்? – ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், “அதிமுக மட்டுமல்லாது, திமுக கூட்டணி கட்சியும், கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றுகேட்கின்றன. அப்படி இருந்தும் சிபிஐ விசாரணைக்கு அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, எம்.மணிகண்டன், முன்னாள் எம்பி நிறைகுளத்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது அதிமுகவினர் சிலர் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலை கைவிட போலீஸார் அறிவுறுத்தியபோது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 17 பேரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
முதல்வர் பதவி விலக வேண்டும்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது, “அடித்தட்டு மக்கள், கூலி வேலை செய்வோர் இவ்வளவு பணம் கொடுத்து மதுவை வாங்க முடியாததால் விலை குறைவாக கிடைக்கும் கள்ளச் சாராயத்தை தேடி செல்கின்றனர். இதற்கு திமுக அரசு தான் காரணம். ஆகவே, கள்ளச்குறிச்சி சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,” என்று அவர் பேசினார்.
கோட்டை விட்டது ஏன்? – கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்சி.சம்பத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், “மரக்காணத்தில் விஷச் சாரய உயிழப்பு ஏற்பட்டபோது இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்ற முதல்வர் மீண்டும் கள்ளக்குறிச்சியில் கோட்டை விட்டது ஏன்?” என்றார்.
இதுதவிர, மதுரை, திண்டுக்கல், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால், கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான நில மோசடி வழக்கில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை (ஜூன் 25) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதால், கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.