போபால்: சத்தீஸ்கரில் நடந்த சோதனையில் மாவோயிஸ்ட்கள் கள்ளரூபாய் நோட்டுகளை அச்சடித்துபுழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ளது.இதை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுக்மா மாவட்ட போலீஸார், மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறியதாவது:
சுக்மா மாவட்டம், கோரஜ்குடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த இடத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம், மை, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய மதிப்பிலான கள்ள நோட்டுகளை கைப்பற்றி உள்ளனர். மேலும் துப்பாக்கி, கம்பியில்லா போன், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.
சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாவோயிஸ்ட்களுக்கு நிதியுதவி செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாவோயிஸ்ட்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கி இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
மாவோயிஸ்ட்கள் வாராந்திர கிராம சந்தைகளில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். அங்கு அவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. இது உள்ளூர் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும். எனவே, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இதுகுறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும் வகையில் ரூபாய் நோட்டுகளை யாராவது கொடுத்தால் அதை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும்.
மேலும் தொலைதூர பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், ரூபாய்நோட்டுகளை பெறுவதற்கு முன்புஅவை உண்மையான நோட்டுதானா என்பதை ஆராய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.