திருப்பூர்: திருப்பூர் மாநகரில் விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட இன்று (திங்கள்கிழமை) அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் பாரப்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 21-ம் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பும் போது, மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 23-ம் தேதி புஷ்பலதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு சிறுநீரகங்கள் இன்று (ஜுன்24) அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
அவரின் இதயம் 50 வயதை கடந்ததால் கொடுக்க இயலவில்லை. உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினர், கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இருபுறமும் நின்று அரசு மரியாதை செய்தனர். இதில் இறந்த புஷ்பலதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.