- இந்த வாரத்திலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை – மட்டக்களப்பு இளைஞர்,யுவதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பது உட்பட அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்,யுவதிகள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.
இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி அளித்த பதில்களும் வருமாறு,
கேள்வி:கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போதுமானதாக இல்லை. அவர்களின் கொடுப்பனவை அதிகரிக்க யோசனை உள்ளதா?
பதில்:முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்தோம். இந்த வாரம் முதல் அதனை செயல்படுத்த இருக்கிறோம்.
கேள்வி:நிரந்தர வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஏராளமானோர் இப்பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உள்ளதா?
பதில்:இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு தேர்தல் காலமாகும். எனவே, இவ்வருடம் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத போதிலும், அடுத்த சில வருடங்களில் பல புதிய வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இப்பகுதியில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாய நவீனமயமாக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் இந்த மாகாணத்தில் பெரும் அபிவிருத்தி ஏற்படும். மேலும், திருகோணமலை துறைமுகம் உட்பட திருகோணமலை நகரின் அபிவிருத்திக்காக இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
கேள்வி:கரடியனாறு பிரதேசத்தில் கல்வி கற்ற அதிகளவான இளைஞர்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களுக்கென ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்த முடியுமா?
பதில்:பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா,
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், கொண்டக்குடா பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்பேட்டையொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் உருவாகும். இது தவிர, பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதோடு தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் போது பிரதமராக இருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்பதை நினைவு கூற வேண்டும்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.