18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: முதல் நாளில் 280 எம்.பி.க்கள் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனநாயகத்துக்கு கரும்புள்ளியாக அமைந்த அவசரநிலை மீண்டும் நிகழக் கூடாது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவி
ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற மரபுப்படி, முதலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

263 பேர் இன்று பதவியேற்பு: இதையடுத்து, மாநிலங்களின் அகரவரிசைப்படி புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நேற்று மொத்தம் 280 உறுப்பினர்கள் பதவியேற்றனர். 263 உறுப்பினர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

மக்களவை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:

சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெறுவதால், ஜனநாயகத்துக்கு இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளித்தது இது 2-வது முறை.

அரசை நடத்த பெரும்பான்மை இருக்க வேண்டும் என்றாலும், ஒருமித்த கருத்தும் அவசியம் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லவும் புதிய அரசு பாடுபடும். நாளை (இன்று) ஜூன் 25-ம் தேதி. இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளியாக அமைந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, இத்துடன் 50 ஆண்டு நிறைவடைகிறது. இதே நாளில் அன்று அரசியல் சாசனம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழித்து எறியப்பட்டது. நாடே சிறைச்சாலையாக மாற்றப்
பட்டது. ஜனநாயகம் முழுமையாக நசுக்கப்பட்டது. அந்த நாளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

நமது அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் அதேவேளையில், 50 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததுபோன்ற செயல் மீண்டும் நிகழ அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் எடுக்க வேண்டும். துடிப்பான ஜனநாயகத்தை உருவாக்கவும், இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டுதல்படி, சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் நாம் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடகத்தையோ, இடையூறுகளையோ மக்கள் விரும்பவில்லை. கோஷங்களுக்கு பதில் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையே விரும்புகின்றனர். ஜனநாயகத்தின் மாண்பை காக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன்.

மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள வெற்றி மிகச்சிறப்பானது. இதன் மூலம் எங்கள் பொறுப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, நாட்டு மக்களின் நலனுக்காக 3 மடங்கு கடுமையாக பணியாற்றுவோம் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.