#VidaaMuyarchi #GoodBadUgly என்கிற ஹேஷ்டேக்குகள்தான் சோஷியல் மீடியாக்களில் இப்போது ட்ரெண்டிங். காரணம், அஜித் குமார்.
இப்போது மகிழ்திருமேனி இயக்கும் ‛விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். இதற்காக அஜர்பெய்ஜானில் உள்ள Baku என்கிற இடத்துக்குப் போகும் வழியே, துபாயில் ஒரு Stopover செய்து, அப்படியே துபாய் ரேஸ் ட்ராக்கில் ரேஸ் கார் ஓட்டியிருக்கிறார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும்தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
அஜித்துக்கு சினிமா நண்பர்களைவிட ரேஸ் மற்றும் பைக் ரைடர் நண்பர்கள்தான் அதிகம். துபாயில் தன் பழைய கார், பைக் ரேஸ் நண்பர்களைச் சந்தித்துவிட்டு, ரேஸ் ட்ராக்கில் ரேஸ் காரில் டாப்ஸ்பீடில் பறந்து என்ஜாய் செய்திருக்கிறார். இந்த வீடியோவைத்தான் பதிவிட்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அந்த ரேஸ் ட்ராக்கின் பெயர் ஆட்டோ டிரோம் (Dubai Auto Drome). மோட்டார் சிட்டி எனும் இடத்தில், FIA (Fédération Internationale de l’Automobile) அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ட்ராக்கின் லேப் நீளம் 5.390 கிமீ. இந்த ட்ராக்கில் யார் வேண்டுமானாலும் கார் ஓட்டிவிட முடியாது. இதற்கு முன்பு ஏரோ டிரோம் நடத்தும் போட்டிகளிலோ, நோவிஸ் கேட்டகிரியிலோ பங்கு பெற்றவர்களால் மட்டும்தான் இதில் கார் ஓட்ட முடியும். அஜித்தான் ப்ரொஃபஷனல் ரேஸராச்சே!
இதில் ரேஸ் ஓட்டுவதற்கு முன்பு, பயிற்சியாளர் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டு அதன்படி ரேஸ் காரில் அமர்ந்து அவர் டிரைவ் செய்வதும் வெளியாகி இருக்கிறது.
சமீபகாலமாக சாம்பியன்ஷிப் ரேஸ் எதிலும் அஜித் பங்குபெறவில்லை. இருந்தாலும் 2010 போன்ற காலகட்டங்களை மறக்க முடியாது. சென்னை, கோவை, மலேசியா, ஜெர்மனி என்று பல நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக்குகளில் ரேஸிங்கில் கலந்து கொண்ட அனுபவம் அஜித்துக்கு உண்டு. ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார் அஜித்.
ரேஸ் கார் ஓட்டிய கையோடு, இன்னொரு வெள்ளை நிற பிஎம்டபிள்யூ காரை ட்ராக்கில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வீடியோவும் பதிவாகி இருக்கிறது. அது ஒரு லெஃப்ட் ஹேண்ட் டிரைவ் கார்.
வலது பக்க ஸ்டீயரிங் ஓட்டுபவர்களால், இடதுபக்க ஸ்டீயரிங் கொண்ட கார்களை ஓட்டுவது ரொம்பக் கஷ்டம். ஆனால், அஜித் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் ஹோல்டர் என்பதால், பலதரப்பட்ட – பல நாட்டுக் கார்களையும் ஓட்டி அவருக்குப் பழக்கம் என்பது அவர் கார் ஓட்டும் ஸ்டைலிலேயே தெரிகிறது. லெஃப்ட் ஹேண்ட் ஸ்டீயரிங் கொண்ட பிஎம்டபிள்யூ காரை அவர் செம ஸ்டைலாக ஓட்டுவது, ரசிகர்களைத் தாண்டி கார் ஆர்வலர்களுக்கும் பரவசமாகத்தான் இருக்கிறது.