ரஜினியின் `வேட்டையன்’ அக்டோபரில் வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதால், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் ரஜினி தான் அடுத்து நடிக்கும் `கூலி’ படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டார். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் நடைபெறுகிறது.
சூப்பர் ஸ்டாரின் 170வது படமாக ‘வேட்டையன்’ படம் உருவாகியுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ரஜினியுடன் 33 வருடத்திற்குப் பின் அமிதாப் பச்சன் கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜுடன் கமிட் ஆன ‘கூலி’யில் நடிக்கிறார். லோகேஷின் ஆஸ்தான அனிருத், அன்பறிவ் கூட்டணி இதிலும் உண்டு. படத்தின் டைட்டில் டீசரே செம வைரலானது. அதில் ஆர்.எக்ஸ் 100 பைக் சத்தத்துடன் கொள்ளையர்களின் கூடாரத்திற்கு வரும் ரஜினி, ஷட்டரை உடைத்து என்ட்ரி கொடந்த்திருப்பார். வின்டேஜ் ரஜினியின் புகழ்பெற்ற, ‘சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா’ என்ற வசனமும் இடம்பெற்றது பேசப்பட்டது.
இந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் கமிட்டானாலும், பாலிவுட் வில்லன் ஒருவரும் இணையலாம் என்ற பேச்சும் இருக்கிறது. ரஜினியுடன் முதன்முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். தமிழில் ‘லாபம்’ படத்திற்குப் பின், தெலுங்கு பக்கம் போன ஸ்ருதி, தனது இரண்டாவது இன்னிங்ஸை லோகேஷின் படத்தில் தொடங்குகிறார். இதர நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது. இயக்குநர் லோகேஷ், விஜய்யின் ‘லியோ’வில் காஷ்மீரில் பிரமாண்ட அரங்கம் அமைத்துப் படப்பிடிப்பை நடத்தியிருந்தார். அது போல ‘கூலி’ படத்திற்காகவும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
சென்னையிலும், ஹைதராபாத்திலும் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஜூலை இரண்டாவது வாரத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது எனத் தகவல். அன்பறிவ்வின் அதிரடி ஆக்ஷனில் அட்டகாசமான ஃபைட் சீனோடு படப்பிடிப்பு தொடங்கும் என்ற பேச்சும் இருக்கிறது. ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையில் எண்ணூர் பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு சீறிப்பாயும் என்கிறார்கள். படத்தை அடுத்தாண்டு பொங்கல் விருந்தாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.