டிரினிடாட்,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அர்ஷ்தீப் சிங் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 15* விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் ஆர்.பி. சிங் 12 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியலில் தற்போது 3வது இடத்தில் 2014-ல் 11 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வினும் மற்றும் 2024-ல் 11* விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜஸ்ப்ரித் பும்ராவும் உள்ளனர்.