விழுப்புரம்: தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி மட்டுமே பெறுவோம் என்பதைக் குறிக்கோளாக கொண்டவர்கள் மத்தியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலமாக 242 முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன்.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனைக்காக வந்திருந்த அவரிடம் வித்தியாசமான, இடைவிடாத இச்செயல் குறித்து கேட்டபோது, “1988ம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை 242 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இந்தியாவில் அதிக தேர்தல்களில் போட்டியிட்டவன் என்ற சாதனையை பெற்றுள்ளேன். ஊராட்சி வார்டு மெம்பர் தொடங்கி ஒன்றியக்குழு, மாவட்டக் குழு, சட்டமன்றம், மக்களவை, குடியரசுத் தலைவர் தேர்தல் வரை 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளேன்.ஆனால் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை.
2011-ம் ஆண்டு மேட்டூர் தொகுதியில் அதிகபட்சமாக 6273 வாக்குகள் பெற்றுள்ளேன். அதேநேரம் மேட்டூரில் உள்ள வார்டுக்கான மெம்பர் தேர்தலில் ஒரு வாக்குகூட பெறவில்லை. இச்சாதனைகளை என் சொந்த மண்ணில்தான் பெற்றுள்ளேன்.
தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் சித்தராமையா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி, எடியூரப்பா, கேரளாவில் பினராயி விஜயன், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆகியோரை எதிர்த்தும் வேட்புமனு தாக்கல் செய்து தோல்வி அடைந்துள்ளேன். அதேபோல இன்றைய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய், பி.வி.நரசிம்மராவ், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர். நாராயணன், அப்துல்கலாம், பிரதிபா பாட்டில், பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு வரை அவர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
இதற்காக மட்டும் போக்குவரத்து செலவு உட்பட ரூ 1 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளேன். எனக்கு அதிக அளவில் டெலிபோன், மோதிரம் சின்னங்களே கிடைத்தது. தற்போது நான் நடத்திவரும் டயர் கடையை பெருமைப்படுத்தும் வகையில் 2019 மக்களவை தேர்தல் முதல் நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தல் வரை டயர் சின்னம் பெற்றேன். நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் டயர் சின்னமே கேட்டுள்ளேன். அதற்கான முடிவு நாளை தெரியவரும்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 6 முறையும், துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 6 முறையும், மக்களவைத் தேர்தலுக்கு 34 முறையும், மாநிலங்களவை தேர்தலுக்கு 52 முறையும், சட்டமன்றத் தேர்தலுக்கு 76 முறையும், எம்.எல்.சிக்கு 4முறையும், மேயர் தேர்தலுக்கு 1 முறையும், ஒன்றியக்குழு தலைவருக்கு 3 முறையும், ஊராட்சிமன்ற தலைவருக்கு 4 முறையும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 12 முறையும், மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 2 முறையும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 3 முறையும், வார்டு மெம்பர் பதவிக்கு 6 முறையும், கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு 31 முறையும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
வேட்புமனு தாக்கல் செய்வதோடு சரி, பிரச்சாரம் செய்வது கிடையாது. 2019-ம் ஆண்டு வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 1887 வாக்குகளைப் பெற்றேன். நடந்து முடிந்த தருமபுரி மக்களவைத் தேர்தலில் 657 வாக்குகள் பெற்றேன். லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டஸ் சாதனையாளர்கள் பட்டியலில் ‘அதிக தேர்தல்களில் தோல்வி பெற்றவர்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளேன். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அதிக தேர்தல்களில் போட்டியிட்ட மனிதர் என்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்பதே இலக்கு” என்றார்.