புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலை ஏற்கெனவே அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், தற்போது சிபிஐ-யும் அவரை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது திகார் சிறையில் இருக்கும் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணையில் அவரிடம் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நாளை உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக காலை 10 மணியளவில் சிறப்பு நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்த உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் அவர் சிபிஐயால் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “உச்சநீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்க 100 சதவீதம் வாய்ப்புள்ள நிலையில், அவரை சிபிஐ மூலம் கைது செய்ய மத்திய அரசு சதி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அமலாக்கத்துறை மறுநாளே (ஜூன் 21) டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது தடைபட்டது.
ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.