தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம்: மத்திய அரசு தொடங்கியது

புதுடெல்லி: தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தவும், சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிக்கவும் அலைக்கற்றை ஏலத்தை அரசு இன்று (ஜூன் 25) நடத்துகிறது.

இது அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த கட்டணத்திலான, அதிநவீன உயர்தர தொலைத் தொடர்பு சேவைகளை எளிதாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப உள்ளது.

தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அழைக்கும் அறிவிப்பு கடந்த மார்ச் 8-ந் தேதி வெளியிடப்பட்டது. 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகிய அலைக்கற்றை அலைவரிசை ஏலத்திற்கு விடப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 10,522.35 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை பல்வேறு அலைவரிசைகளில் ரூ.96,238.45 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது.

அலைக்கற்றை ஏலத்தின் சிறப்பம்சங்கள்: இந்த ஏலத்தில் பார்தி ஏர்டெல் லிமிடெட், வோடபோன் ஐடியா லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் ஆகிய மூன்று ஏலதாரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஏலம் ஒரே நேரத்தில் பல சுற்று அசென்டிங் மின்-ஏலமாக இருக்கும். அலைக்கற்றை 20 ஆண்டு காலத்துக்கு ஒதுக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள் 8.65% வட்டி விகிதத்தில் தற்காலிக நிகர மதிப்பை முறையாக பாதுகாத்து, 20 சம வருடாந்திர தவணைகளில் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏலத்தின் மூலம் பெறப்பட்ட அலைக்கற்றைகளை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுக்கலாம். இந்த ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைகளுக்கு பயன்பாட்டு கட்டணம் (எஸ்.யூ.சி) கிடையாது. வெற்றிகரமான ஏலதாரர் நிதி வங்கி உத்தரவாதம் மற்றும் செயல்திறன் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏலதாரர்களை இ-ஏல தளத்துடன் பழக்கப்படுத்துவதற்காக ஜூன் மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் மாதிரி ஏலங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஏலதாரர்களின் தரவுகளில் எந்தத் தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஏலப் பட்டியல் நேற்று (ஜூன் 24) காலை 09:00 மணிக்கு வெளியிடப்பட்டது. நேரடி ஏலம் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.