பஞ்சாப்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லிம் மதத்தை துவேஷம் செய்ததாக 55 வயது நபரை 14 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்துள்ளார். இது அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் 55 வயதான நசீர் ஹுசைன் ஷா. அவர் ஷியா என்ற இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்தவர். அந்த நாட்டில் இந்தப் பிரிவு சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது.
கொலை செய்த 14 வயது சிறுவனின் தந்தை, அந்தப் பகுதியில் உள்ள சன்னி பிரிவு மக்கள் வழிபடும் மசூதியில் வழிபாடு சார்ந்த முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இந்தச் சூழலில் சிறுவனின் தந்தை மற்றும் அவரது உறவினரிடம் நபிகள் நாயகத்தின் தோழர்களை இழிவு செய்யும் வகையில் நசீர் ஹுசைன் ஷா பேசி வந்துள்ளார்.
இந்த விவகாரம் அந்த சிறுவனுக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சென்று, நசீர் ஹுசைன் ஷாவை பலமுறை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அந்த இடத்தில் இருந்து சிறுவன் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்க சிறப்பு குழு அமைத்துள்ளது அந்த நாட்டு காவல் துறை. மேலும், இந்த வழக்கில் சிறுவனின் தந்தை மற்றும் உறவினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம் தான் அந்த நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குர்ஆன் புனித நூலை எரித்த காரணத்துக்காக 40 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களில் இறை நம்பிக்கைக்கு எதிராக பேசிய காரணத்துக்காக மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.