வளங்கள் சமமாக கிடைக்கும் வகையில் கல்வி முறையில் செலவினத் தலைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

23.06.2024 அன்று கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

புதிய அறிவையும், புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது இன்றைய மாணவர் தலைமுறைக்கு மிகவும் அவசியமான சவாலாக உள்ளது. அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அந்த சவாலின் மூலம், நம் பிள்ளைகள் எதிர்காலத்திற்கு பயணிக்கக்கூடிய பாதையை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சாதனையுடனும், எதிர்காலத்தை திட்டமிடும் ஆர்வத்துடனும், கொட்டாவை பிரதேசத்தில் ஒரு பெரிய கல்லூரியாக தன்னை மாற்றுவதற்குத் தேவையான பலத்தை கொட்டாவ ஆனந்த வித்தியாலயம் பெற வேண்டும். அதன் மூலம் தான் நாம் முன்னேற முடியும். பாடசாலைகளில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் சிக்கலாகவுள்ள துறைகளில் வளங்கள் இல்லாதிருப்பது ஒரு முக்கியமான பகுதியாகும்.

வளங்களுக்காக முதலீடு செய்யக்கூடிய அளவு எதிர்பார்க்கப்படும் இலக்குகளை விட குறைவாகவே உள்ளது. அதனால்தான் நாடு முழுவதும் கல்வி நிலை சீரற்றதாக உள்ளது. எதிர்பார்க்கின்ற இலக்குகளை அடைவதில் போட்டி அதிகரித்துள்ளது. போட்டித் தன்மை அதிகரிப்பது நல்லது என்ற போதும் நம் பிள்ளைகள் ஆழமான அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் பல்வேறு பயிற்சி நெறிகளைப் பயன்படுத்தி ஒரு தலைமுறை ஆசிரியர்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து முழு அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த பிள்ளைகள் அனைவரும் நாட்டின் எதிர்காலத்தில் பெரும் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பிள்ளைகளாக மாற வேண்டும். இன்றைய சமுதாயத்தின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பிரவேசித்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக எங்கள் பிள்ளைகள் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

தற்போதுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் நமது கல்விமுறையின் வரவுசெலவுத் திட்டம், நமது பிள்ளைகளை கடைசி வகுப்பு வரை வளங்களுடன் பயணிக்க வைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய கொடையான கல்வியைத் தொடர முடியும், அந்த மனநிறைவை பெற்றோர்களாகவும், பாடசாலையாகவும் அடைய முடியும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கொட்டாவ ஆனந்த வித்தியாலய அதிபர் திஸ்னா வெலிகல, முன்னாள் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடிகார, கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் துமிந்த சஞ்சீவ பாலசூரிய, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.