நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தங்களின் அனைத்து பிரசார மேடைகளிலும், `இது இந்திய அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல்’ என முழங்கியது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது அனைத்து பிரசார மேடைகளிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கறுப்பு-சிவப்பு நிற பாக்கெட் சைஸ் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் (Constitution of India) புத்தகத்தை கையிலேந்தினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது பிரசாரங்களில் காட்டிவந்த கறுப்பு-சிவப்பு நிற பாக்கெட் சைஸ் அரசியலமைப்பு சாசன புத்தகம், தேர்தல் சமயத்தில் மட்டும், 2023-ம் ஆண்டு முழுவதும் விற்பனையான பிரதிகளுக்கு ஈடாக 5,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக அதனை வெளியிடும் ஒரே பதிப்பகமான லக்னோவின் ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக EBC வெளியீட்டாளர் சுமீத் மாலிக், “இந்த அரசியலமைப்பு புத்தகம் 16 பதிப்புகள் அச்சிடப்பட்டிருக்கிறது.
தற்போது தேவை மிகவும் அதிகமாக உள்ளது. புதிய ஸ்டாக் கிடைத்தவுடன் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகிறது” எனக் குறிப்பிட்டார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டப் பிறகு நடந்த முதல் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு, இந்தியா கூட்டணியின் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி-கள் இந்தப் புத்தகத்தை கையில் ஏந்தியபடியே வருகை தந்தனர்.
நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின்போதும், இந்தியா கூட்டணியினர் இந்தப் புத்தகத்தை கையில் ஏந்தி, “மோடி அரசு அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுகிறது” எனத் தெரிவித்தனர். பா.ஜ.க எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி விமர்சித்தது. மேலும், சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்தப் புத்தகத்தை வைத்துதான் போராட்டம் நடத்தினர்.