ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `இந்தியன் 2′ திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையைக் காணவிருக்கிறது.
கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘விக்ரம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கமல் தொடர்ந்து பல படங்களில் பிஸியாகி, நீண்ட நாள் எதிர்பார்த்த ‘இந்தியன் 2’ படத்தில் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கும் கமல், “ஒரு சினிமாவை எடுத்ததுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இருவர்தான் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஹிட்ச்காக் மற்றொருவர் செசில் (Cecil). ஹிட்ச்காக் 39 பிரேம்ஸ் படத்தை அவரே B/W ல எடுத்தாரு. அவரே அதை கலர்லையும் எடுத்தாரு. இப்போ ஷங்கர் அந்த விஷயத்தை பண்ணியிருக்காரு.
இதே வடபழனி ரோட்டுல இருக்குற டப்பிங் ஸ்டூடியோலதான் ‘இந்தியன் 1’ டப்பிங் நடந்தது. அப்போ ஷங்கர்கிட்ட இந்தியன் இரண்டாம் பாகம் பண்ணலாம்னு சொன்னேன். இரண்டாம் பாகத்துக்கான கதைக் கருவை எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தாவின் வருகை இரண்டாம் முறை நடந்திருக்கிறது. கோவிட் காலம், விபத்துகள் என அனைத்தையும் தாண்டி இப்படத்தைச் சாத்தியப்படுத்திய லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.
இதே ரோட்லதான் விவேக் நடிக்கும் காட்சிகளைப் படம் பிடித்தோம். அவர் நடித்த காட்சிகளைப் பார்த்தோம். விவேக்கை ரொம்ப மிஸ் பண்றோம். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதை இந்தியன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்துல பலரும் சம்பளம் வாங்கி நடிச்ச மாதிரியே இல்ல. சந்தோசமாக நடிச்ச மாதிரிதான் இருக்கு. சித்தார்த் என்மேல அதிகளவுல அன்பு வச்சிருக்கார். 100 சதவிகித உழைப்பை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதை அனிருத்தைப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன்” என்று பேசியிருக்கிறார்.