மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.
உத்தரப்பிரதேசம் ரேபரேலி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வென்றிருந்தார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரேபரேலி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர்கிறார்
‘பாலாற்றில் புதிய தடுப்பணை’ – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, “பாலாற்றில் புதிய தடுப்பணைக் கட்டப்படும். சென்னை, பெங்களூர் நகரங்களுக்குச் செல்லும் வகையில் குப்பம் ரெயில் நிலையம், ‘முக்கிய சந்திப்பு’ ஜங்கஷனாக மாற்றப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.
சபாநாயகர் தேர்வு: NDA – I.N.D.I.A இடையே போட்டி!
மக்களவை சபாநாயகர் பதவிக்கு NDA கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சகியின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் கொடிக்குன்னில் சுரேஷ், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், காங்கிரஸ் சார்பில் 8 முறை எம்.பி-யானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனாதன பேச்சு தொடர்பான வழக்கு; பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!
முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் `சனாதன எதிர்ப்பு’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசியது, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `சனாதன தர்மம் சமூகநீதிக்கு, சமத்துவத்துக்கும் எதிரானது. எனவே சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டியது’ என உதயநிதி பேசியதற்கு, பாஜக-வினர் மற்றும் வலதுசாரியினர் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்கள்கூட நடத்தினர். பிரதமர் மோடியே இது குறித்து தனது அமைச்சரவையில் அமைச்சர்களிடம் பேசியிருந்தார்.
மேலும் உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு எதிராக, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. அந்த வகையில் சமூக ஆர்வலர் பரமேஷ் என்பவரும், உதயநிதிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக, உதயநிதி ஸ்டாலின் பெங்களூருவுக்குச் சென்றிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60-ஆக அதிகரிப்பு!
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சியில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 60-ஆக அதிகரித்திருக்கிறது.
`1975 Emergency; பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
1975-ல் இந்தியா முழுவதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட தினம் இன்று (ஜூன் 25). இந்த தினத்தை பா.ஜ.க-வினர் கறுப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவி, `பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்’ என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது. ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி,
புத்தகங்கள், உடைகளைக்கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்.” என்று பதிவிட்டிருக்கிறார்.