புதுடெல்லி: “சபாநாயகர் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தி தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானார். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா. அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.
தொடர்ந்து ஓம் பிர்லாவை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தி பேசுகையில், “இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இண்டியா கூட்டணி சார்பில் எனது வாழ்த்துக்கள். இந்த அவை இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள்.
அரசாங்கத்திடம் அரசியல் அதிகாரம் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளும் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடந்த முறை இருந்ததை விட இந்திய மக்களின் குரலை இம்முறை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே பிரதிபலிக்கின்றன. உங்களின் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதற்கேற்ப இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்.
நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். அதேபோல, இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரலும், பிரதிநிதித்துவமும் மிகவும் முக்கியமானது.” என்று தெரிவித்தார்.