புதுடெல்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தைக் கண்டித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானம் ஒன்றை வாசித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானம் கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி: “சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எமர்ஜென்சியை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலக்கட்டத்தில் நடந்த அத்துமீறல்களை முன்னிலைப்படுத்தி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதத்தை குறிப்பிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். எமர்ஜென்சி நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மவுனமாக நிற்பது சிறந்த சைகை.
50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது என்றாலும், இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்படும்போதும், பொதுக் கருத்துகள் முடக்கப்படும்போதும், ஏஜென்சிகள் அழிக்கப்படும்போதும் என்ன நடக்கும் என்பதற்கு எமர்ஜென்சி ஒரு பொருத்தமான உதாரணம். எமர்ஜென்சியின்போது நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.”
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: “இன்று பாஜக என்ன செய்தாலும் அவை வெறும் பாசாங்குதான். எமர்ஜென்சி நேரத்தில் சிறை சென்றவர்கள் அவர்கள் மட்டும் அல்ல. எத்தனை காலம்தான் கடந்த காலத்தையே திரும்பிப் பார்ப்பது?”.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர்: “தேவையற்ற பிரிவினைவாத அரசியலை பாஜக செய்து வருகிறது. இது நாட்டுக்கு நல்ல செய்தியை சொல்லவில்லை.”
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு: “1975 ஜூன் 26 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனியாக முடிவெடுத்து எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அதனால்தான் இன்று அதற்கு எதிராக நாங்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அரசியல் சட்டம் நசுக்கப்படுவதை நாங்கள் மீண்டும் அனுமதிக்க மாட்டோம்.”
மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு: “இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு எமர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள். எமர்ஜென்சிக்கு எதிராக அவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் ஏன் சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள்? எமர்ஜென்சி மீண்டும் வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? இல்லை, அவர்கள் எமர்ஜென்சியை ஆதரிக்கிறார்களா?”
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்: “சபாநாயகர் தேர்தல் மிகவும் சுமுகமாக நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று சபாநாயகருக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்னரும் சபாநாயகரே எமர்ஜென்சி குறித்து தேவையில்லாத, பிரிவினையை தூண்டும் வகையிலான அறிக்கை கொண்டுவந்தது துரதிருஷ்டவசமானது.
எமர்ஜென்சியை கொண்டுவந்ததற்காக இந்திரா காந்தியே வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், 1977 தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். பாஜக பின் கண்ணாடியை பார்த்து தனது கார் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜகவினர் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. புதிய ஆட்சி தொடங்கும் முறை இதுவல்ல. எமர்ஜென்சி விவகாரம் தூசி தட்டப்படுகிறது. அதனைவிட மத்திய ஏஜென்சிகளின் கழுத்து நெரிப்பதைப் பற்றியே விவாதிக்க வேண்டும்.”
பாஜக எம்.பி. சம்பித் பத்ரா: “ஒட்டுமொத்த தேசமும் இன்று போராட்டம் நடத்துகிறது. இந்த நாள் இந்திய மக்களின் மனதில் ஒரு முக்கியமான நாள். 49 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தியால் இதே நாளில் தான் எமர்ஜென்சி விதிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்திய அரசியலமைப்பில் 42-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசும்போது அவருக்கு முன் கண்ணாடியைக் காட்ட வேண்டும்.”
பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்: “அரசியலமைப்புக்காக அதிகம் பேசுபவர்கள்தான் எமர்ஜென்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அப்பா, பாட்டி பெயரை கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். அதேபோல் அவர்கள் செய்த செயலுக்கு பொறுப்பேற்பார்களா?”
லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான்: “இந்தியாவின் வரலாற்றில் எமர்ஜென்சி ஒரு கரும்புள்ளி. நாடு முழுவதும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. தற்போதைய தலைமுறையினரும், வரும் தலைமுறையினர் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.”
பின்னணி என்ன? – மக்களவை சபாநாயகராக புதன்கிழமை பொறுப்பேற்ற ஓம் பிர்லா, சிறிது நேரத்திலேயே 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை வாசித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அவர்களின் எதிர்ப்பை மீறி சபாநாயகர் ஓம் பிர்லா தனது தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவர், “1975-ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தினார்.
இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும் விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அவை எப்போதும் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தேசமும் அப்போது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித் துறையின் தன்னாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது” என்று தெரிவித்தார்.