ICC WORLD RANKINGS: ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் கடந்த 2023 முதல் டி20 பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் சரியான பார்மில் இல்லாததால் தனது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஹெட்டிடம் பறிகொடுத்துள்ளார். இந்த 2024 டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். சூர்யகுமார், பில் சால்ட், பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டிராவிஸ் ஹெட்
இந்தியாவிற்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இந்த டி20 உலக கோப்பையில் டிராவிஸ் ஹெட் 7 போட்டிகளில் 42 சராசரியில் 255 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியா அணி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. இந்த உலகக் கோப்பையில் 139 ஸ்டிரைக் ரேட்டில் 149 ரன்கள் எடுத்துள்ள சூர்யகுமார் யாதவ், நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதல் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. டிராவிஸ் ஹெட்டை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் சூர்யா.
சிறந்த ஆல்ரவுண்டர்
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஸ்ரீலங்காவின் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டோனிஸ் நான்காவது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் வெஸ்ட் இண்டீஸின் ரோஸ்டன் சேஸ் 17 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பவுலிங் தரவரிசை
டி20 போட்டிகளில் சிறந்த பவுலர்கள் தரப்பில் இங்கிலாந்தின் அடில் ரஷீத் முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் ரசித்கான் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வனிந்து ஹசரங்க மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 11வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 44 இடங்கள் முன்னேறி 24வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 38வது இடத்திலும் உள்ளனர். பும்ரா இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆறு இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளை 4.08 என்ற பொருளாதார விகிதத்துடன் எடுத்துள்ளார்.