T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி அனைவரும் அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அணியில் நிறைய மாற்றங்களை செய்ய திட்டமிட்டது. அதன்படி வீரர்களின் சம்பளம் மற்றும் மற்ற லீக்களில் விளையாடு போன்றவற்றில் கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை இது போன்ற முடிவுகளை எடுக்க தூண்டி உள்ளது.
சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் வீரர்கள்
டி20 உலகக் கோப்பையின் போது அமெரிக்காவில் நடைபெறும் சில பார்ட்டிகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் ஒரு நபருக்கு 2,500 அமெரிக்க டாலர்கள் வாங்கியுள்ளது தற்போது வெளியாகி உள்ளது. மேலும் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் பிற வீரர்களுக்கு இடையே பணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘நட்சத்திரங்களுடன் ஒரு இரவு’ என்ற நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் முக்கியமான போட்டிகள் நடைபெறும் நேரத்தில் வீரர்கள் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்று கவனக்குறைவாக செயல்களில் ஈடுபட்டு இருப்பது பற்றி தீவிர ஆய்வை பாகிஸ்தான் வாரியம் மேற்கொள்ள உள்ளது.
பாகிஸ்தான் அணிக்குள் பிளவு?
கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி இடையே தலைமைத்துவ போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் அணி இருக்கும் சிக்கலில் இது மேலும் பதட்டமான சூழலை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். பிறகு நடைபெற்ற சில தொடர்களில் ஷாஹீன் ஷா அப்ரிடி கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அவரது தலைமையிலும் தொடர் தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சில அதிரடி முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி சில மூத்த அதிகாரிகளின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இது அணியிலும் பிளவை ஏற்படுத்துவதாகவும் கருதுகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே, நிர்வாக மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்றும், வரும் போட்டிகளில் வீரர்களுக்கு சில கடுமையான கொள்கைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் குடும்பங்களை ஐசிசி போட்டிகள் மற்றும் பிற முக்கிய போட்டிகளுக்கு அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்படலாம். முக்கிய போட்டிகளின் போது வீரர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சில அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அனைத்து நிர்வாக அதிகாரிகளிடமிருந்தும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைகளை கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தி உள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் சில அதிகாரிகள் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி உள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.