காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு காசாவில் உள்ள 2 பள்ளிக்கூடங்கள் மற்றும் ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் ஆணையத்தின் தலைவரான இஸ்மாயில் ஹானியாவின் சகோதரி உள்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத செயல்களுக்காக ஹமாஸ் அமைப்பினர் பள்ளிக்கூடங்களை பயன்படுத்தி வந்ததாகவும், அங்கு பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.