ரியாத்: தனது குடும்பத்தினருடன் அண்மையில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார் முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இந்தப் பயணத்தின் படங்களை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. இவரும், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம்ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். இந்த தகவல் கடந்த ஜனவரி மாதம் பொதுவெளியில் தெரியவந்தது.
இந்தச் சூழலில் சானியா தற்போது ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது தந்தை இம்ரான் மிர்சா, சகோதரி அனம் மிர்சா, அனம் மிர்சாவின் கணவர் மொகமது அசாதுதீன் ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.
இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் சானியா மிர்சாவும் அங்கு பயணித்துள்ளார்.
சவுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக நடப்பு ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை அண்மையில் சவுதி அரேபியாவின் அரசு உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.