உடல் எடையைக் குறைக்க உதவுவதாக திருமணத்திற்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஜிம் பயிற்சியாளரான கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத்தர கோரி மனைவி குடும்ப நல ஆலோசனை மையத்தை நாடி இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தின் நியூ ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஜிம் பயிற்சியாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஜிம் பயிற்சியாளரின் உடல் கட்டமைப்பை பார்த்து அந்தப் பெண் அவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் இந்தக் காதல் திருமணத்தை நோக்கிச் செல்ல, அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு தனது உடல் எடையைக் குறைக்க ஜிம் பயிற்சியாளர் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். ஜிம் பயிற்சியாளரும் கண்டிஷனுக்கு ஓகே சொல்ல, கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை கணவன் மனைவிக்கு அளித்துள்ளார். இருந்தும் உடல் எடை குறையாமல் மனைவி அதே 75 கிலோவிலேயே இருந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஆக்ரா பகுதியில் உள்ள குடும்ப நல ஆலோசனை மையத்தில், உடல் எடையைக் குறைத்துக் காட்டுவதாகக் கூறி தன் கணவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், உடல் எடை கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கிறது. பொய்யான வாக்குறுதி கொடுத்து அவர் என்னை திருமணம் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இனியும் என்னால் அவருடன் வாழ இயலாது. அதனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு வழக்குப் போட்டிருக்கிறார்.
இதுக்குறித்து இருவருக்கும் குடும்ப நல ஆலோசனை மையத்தின் சார்பில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பிறகும் மனைவி அவரது முடிவில் உறுதியாக இருப்பதாகவும், கணவனோ மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமித் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகிய நிலையில், “என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…ஒரு நியாயம் வேண்டாமா?!” என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.